சூட்கேசில் சிறுமி உடல் வீசப்பட்ட வழக்கு; உறவுக்கு மறுத்ததால் கொன்றது அம்பலம்
சந்தாபூர் : சூட்கேசில் சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், உறவுக்கு மறுத்ததால் மர்ம உறுப்பில் பீர் பாட்டிலால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் காதலன் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு பழைய சந்தாபூர் ரயில்வே சுரங்கப்பாதையில், கடந்த மாதம் 21ம் தேதி கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடந்தது. சூட்கேசை சூர்யாநகர் போலீசார் திறந்தபோது 17 வயது சிறுமியின் உடல் இருந்தது. வேறு எங்கேயோ கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து, இங்கு வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுமி, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பீஹார் சென்ற சூர்யாநகர் போலீசார், சிறுமி கொலை வழக்கில் ஆஷிக் குமார், 22, முகேஷ் ராஜ்பன்ஷி, 35, இவரது மனைவி இந்துதேவி, 32, ராஜராம்குமார், 18, பிந்துகுமார், 18, கலு குமார், 18, ராஜு குமார், 18, ஆகிய 7 பேரை கைது செய்தனர்.நேற்று முன்தினம் அவர்களை பெங்களூரு அழைத்து வந்தனர்.விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியது:ஆஷிக்குமார், பெங்களூரு கச்சநாயக்கனஹள்ளியில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தார். கடந்த மாதம் 13ம் தேதி சொந்த ஊருக்கு சென்றார். அவருக்கும், பக்கத்து கிராமத்தின் 17 வயது சிறுமிக்கும் அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியது.அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு கடந்த மாதம் 15ம் தேதி ரயிலில் புறப்பட்டார். இருவரும் 18ம் தேதி காலை பெங்களூரு வந்தனர்.மறுநாள் தன் உறவினர் முகேஷ் ராஜ்பன்ஷி வீட்டிற்கு சிறுமியை, ஆஷிக்குமார் அழைத்துச் சென்றார். 20ம் தேதி உறவு கொள்ள வரும்படி சிறுமியை, ஆஷிக்குமார் அழைத்து உள்ளார்.இதற்கு மறுத்ததால் கோபம் அடைந்த ஆஷிக்குமார், சிறுமியை சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலை உடைத்து, மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கி உள்ளார்.மேலும் இருப்புக் கம்பியால் தாக்கி, கழுத்தையும் நெரித்து உள்ளார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தார்.அதிர்ச்சி அடைந்த ஆஷிக்குமார், உறவினர்களான முகேஷ், ஹிந்துதேவி, ராஜராம்குமார், பிந்துகுமார், கலுகுமார், ராஜு குமார் ஆகியோர் உதவியுடன் சிறுமியின் உடலை சூட்கேசில் வைத்து எடுத்துச் சென்று, பழைய சந்தாபூர் ரயில்வே சுரங்கப்பாதையில் வீசி உள்ளார்.ரயிலில் இருந்து சூட்கேஸ் வீசப்பட்டது என்று போலீசாரை நம்ப வைப்பதற்காக இப்படி செய்துள்ளனர். ஆனாலும் சிறுமி உடலை சூட்கேசில் எடுத்துச் சென்ற காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.அந்த காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.