உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வனத்துறை துாதராக அனில் கும்ப்ளே அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

வனத்துறை துாதராக அனில் கும்ப்ளே அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

பெங்களூரு : ''இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேயை, வனத்துறை துாதராக நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்வோம்,'' என்று, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசின் வனத்துறை துாதராக, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேயை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்வோம்.கர்நாடக வனவிலங்கு வாரியத்தின் துணை தலைவராகவும் அவர் பணியாற்றி உள்ளார். வனவிலங்குகள் மீதான அவரது அபரிதமான அக்கறை, காடுகள் மீதான அவரது ஆர்வம் ஆகியவை, துாதர் பொறுப்புக்கு அவரை பொருத்தமான நபராக எடுத்து காட்டுகிறது. துாதராக இருக்க நாங்கள் அவரை தொடர்பு கொண்ட போது, எந்த ஊதியமும் இன்றி முற்றிலும் சமூக நோக்கத்துடன் சேவை செய்ய ஒப்பு கொண்டார். இது பெருமைக்குரிய விஷயம்.புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உலகம் சந்தித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் பசுமை போர்வையை அதிகரிப்பது வனத்துறையின் பொறுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்நாடகாவில் 8.50 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.பெங்களூரு எலஹங்கா அருகே மடப்பனஹள்ளியில் 153 ஏக்கரில் பூங்கா அமைக்க முடிவு செய்து உள்ளோம். இதற்கான அடிக்கல் நாட்டு விழா, இரண்டு மாதங்களில் துவங்கும். ஹைதர் அலி ஆட்சி காலத்தில் லால்பாக் பூங்கா உருவாக்கப்பட்டது. ஒரு நுாற்றாண்டுக்கு பிறகும், பெங்களூரில் புதிதாக பூங்கா உருவாக்கப்படவில்லை. நகரில் உள்ள நிலம், தங்கத்தின் விலைக்கு நிகரானது. இங்கு பல தசாப்தங்களாக வன நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் எச்.எம்.டி., நிறுவனத்திடம், கர்நாடக அரசுக்கு சொந்தமான 14,300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலத்தை மீட்க சட்ட போராட்டத்தை துவக்கி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி