கர்நாடக வனத்துறை துாதராக அனில் கும்ப்ளே நியமனம்
பெங்களூரு : கர்நாடக வனத்துறையின் துாதராக ஊதியம் எதுவும் பெறாமல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டு உள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழல் பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேவை, கர்நாடக அரசின் வனத்துறை துாதராக நியமனம் செய்ய பரிந்துரைப்பேன் என்று வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.இந்நிலையில், நேற்று அனில் கும்ப்ளே பெங்களூரில் உள்ள வனத்துறை அமைச்சரின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரை சந்தித்தார்.இதன்பின், அமைச்சர் அளித்த பேட்டி:அனில் கும்ப்ளேவுக்கு வனம் மற்றும் வன விலங்குகள் மீதான அக்கறை அதிகம். மேலும், அவர், கர்நாடக வனவிலங்கு வாரியத்தின் துணை தலைவராக கடந்த காலங்களில் பணியாற்றி உள்ளார். தற்போது, அவர் கர்நாடக வனத்துறை துாதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.இதற்கு அவர் 1 ரூபாய் கூட ஊதியம் வேண்டாம் என கூறிவிட்டார். இதை நான் மனமார பாராட்டுகிறேன். இந்த நியமனம், வனத்துறைக்கு மேலும் பாதுகாப்பை வலுப்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.அனில் கும்ப்ளே கூறுகையில், ''வனத்துறையின் துாதராக நியமித்ததற்கு அரசுக்கு நன்றி. வனத்தை மேம்படுத்துவதில் வனத்துறையினருடன் இணைந்து பணியாற்றுவேன். இந்த முறை பிரீமியர் லீக் தொடரில் யார் வெற்றி பெற்றாலும், புதிய சாம்பியனாக இருப்பர்,'' என்றார்.