வெளிமாநிலத்துக்கு கடத்த முயன்ற அன்னபாக்யா அரிசி பறிமுதல்
கொப்பால்: வெளி மாநிலத்துக்கு கடத்த முயற்சித்த 'அன்னபாக்யா' அரிசியை, லாரியுடன் உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏழை மக்களின் நலனுக் காக, கர்நாடக அரசு 'அன்னபாக்யா' திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால் இந்த அரிசியை, வியாபாரிகள், ரேஷன்கடை உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து, பாலிஷ் செய்து உயர் தரமான அரிசியாக்கி, வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கடத்துகின்றனர். கொப்பால் நகரின், கூகனஹள்ளி கிராமத்தின் அருகில், இரண்டு நாட்களுக்கு முன்பு, அதிகாலை லாரியில் அரிசி கடத்துவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள், அங்கு சென்று காத்திருந்தனர். அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்டபோது, 'அன்னபாக்யா' அரிசி மூடைகள் இருப்பது தெரிய வந்தது. அதில் இருந்த எட்டு டன் அரிசியை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'அன்னபாக்யா' அரிசி 16 டயர் லாரியில் கடத்தப்பட்டுள்ளது. அந்த லாரி, 35 டன் திறன் கொண்டதாகும். சோதனை நடந்தபோது, லாரி முழுதும் அரிசி மூடைகள் இருந்ததை, கிராமத்தினர் பார்த்துள்ளனர். ஆனால் உணவுத்துறை அதிகாரிகள், போலீசாருக்கு வெறும் எட்டு டன் அரிசி இருந்ததாக கணக்கு காட்டியுள்ளனர். அரிசி கடத்தலில் உணவுத்துறை அதிகாரிகளும் கைகோர்த்திருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். விசாரணை நடத்தும்படி வலியுறுத்துகின்றனர்.