உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இஸ்ரோவில் வேலை என ரூ.1 கோடி மோசடி இளம்பெண் முன்ஜாமின் மனு தள்ளுபடி

இஸ்ரோவில் வேலை என ரூ.1 கோடி மோசடி இளம்பெண் முன்ஜாமின் மனு தள்ளுபடி

பெங்களூரு: 'இஸ்ரோ'வில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து. 1.03 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த பெண்ணின் முன்ஜாமின் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பெங்களூரின் நாகரபாவியில் வசிப்பவர் சஞ்சய். 35. இவர் லக்கரேவில் உள்ள தன் வீட்டின் கீழ் தளத்தை, வினுதா, 32, என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். 2024 ஆகஸ்டில் நாகரபாவியில் சஞ்சய் வீட்டுக்கு வினுதா வந்திருந்தார்.அப்போது அவர், 'இஸ்ரோவில் எனக்கு உயர் அதிகாரிகளை தெரியும். அங்கு கிராபிக் டிசைனர் பணியிடம் காலியாக உள்ளது. நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அந்த பணி கிடைக்க செய்கிறேன். இதற்கு பணம் செலவாகும்' என ஆசை வார்த்தை கூறினார்.

ரூ.37 லட்சம்

இஸ்ரோவில் வேலை கிடைக்கும் என்ற ஆசையில், சஞ்சய் சம்மதித்து முதற்கட்டமாக 37 லட்சம் ரூபாய் கொடுத்தார். இதற்காகவே விக்டோரியா மருத்துவமனையில் பிட்னஸ் சான்றிதழும் பெற்றிருந்தார். பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும், பணி நியமன கடிதம் வரவில்லை.இது குறித்து வினுதாவிடம் கேட்ட போது, 'உங்களின் பணி நியமன உத்தரவு வந்துள்ளது. ஆனால் கூடுதலாக 23 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லாவிட்டால் முன்பு செலுத்திய பணமும் திரும்ப கிடைக்காது' என்றார்.சஞ்சய்க்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதால், அவரை இஸ்ரோவுக்கு அழைத்து சென்ற வினுதா, அங்கிருந்த சுப்ரதோ பாதோ, ரெட்டப்பா ராஜேந்திரா, அனில்குமார் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும், 'பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும்' என கூறியதால், நம்பிக்கை ஏற்பட்டு சஞ்சய் 23 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

நியமன கடிதம்

அதன்பின்னரும் படிப்படியாக பணம் வாங்கினர். மொத்தம் 1.03 கோடி ரூபாயை பெற்று கொண்டும், பணி நியமன கடிதம் கிடைக்கவில்லை; பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இது குறித்து, அவர் நெருக்கடி கொடுத்ததால், 'இஸ்ரோ' பெயரில் போலியான பணி நியமன கடிதம் கொடுத்தார்.இது போலி என்பதை தெரிந்து கொண்ட சஞ்சய், தன் பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால் அவர்கள் தரவில்லை. எனவே வினுதா உட்பட நால்வர் மீதும் மே முதல் வாரம், லக்கரே போலீஸ் நிலையத்தில், சஞ்சய் புகார் செய்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினர். மே 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, வினுதாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.தற்போது கோவிந்தராஜநகரில் வசிக்கும் வினுதா, கைது பீதியால் முன் ஜாமின் கோரி, பெங்களூரின் 66வது கூடுதல் நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனு தொடர்பாக, நீதிபதி ஜெயபிரகாஷ் முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ''எந்த நபராக இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து அதிகாரிகளிடம் இருந்து சம்மன் வரும் போது, அதிலுள்ள உத்தரவை பின்பற்றுவது அவரது கடமை. அதன்படி மனுதாரர், மே 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் ஆஜராகவில்லை. இது சட்ட விரோதம்.''கொள்ளேகால் மற்றும் சிக்கமகளூரு போலீஸ் நிலையங்களில் பதிவான மோசடி வழக்குகளிலும், மனுதாரருக்கு தொடர்புள்ளதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ''இது அவர் குற்றவாளி என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. முன்ஜாமின் பெற, இவர் தகுதியானவர் அல்ல. இச்சூழ்நிலையில், அவருக்கு முன்ஜாமின் அளித்தால், அவர் வெளியில் இருந்து இதுபோன்ற மோசடிகளை தொடரும் வாய்ப்புள்ளது,'' என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும் வினுதா வைத்துள்ள இஸ்ரோவின் போலியான பணி நியமன கடிதங்களை பறிமுதல் செய்யும்படி, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார், வினுதாவை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை