நம்ம மெட்ரோ புதிய வழித்தடங்களில் ரயில் கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஒப்புதல்
பெங்களூரு: 'நம்ம மெட்ரோ'வின் புதிய வழித்தடங்களில், ரயில் கட்டுப்பாட்டு அமைப்பை செயல்படுத்துவதற்கு, மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரின் காலேன அக்ரஹாரா - நாகவாரா; சில்க் போர்டு - விமான நிலையம் இடையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காலேன அக்ரஹாரா - நாகவாரா இடையில் இந்த ஆண்டும்; சில்க் போர்டு - விமான நிலையம் இடையே அடுத்த ஆண்டும் மெட்ரோ ரயில் சேவை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு புதிய பாதையிலும் அதிநவீன சிக்னல்கள், ரயில் கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ ஒப்புதல் வழங்க வேண்டும் என்று, மத்திய ரயில்வே வாரியத்திடம், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கைக்கு, மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு என்பது ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருப்பதையும், பாதுகாப்பாகவும், துல்லியமான வேகத்தில் இயங்குவதையும் உறுதி செய்கிறது. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட ரயில் வேகமாக சென்றால், இந்த அமைப்பு தானாக வேகத்தை குறைக்கும் அல்லது அவசரகால பிரேக்கை இயக்கும். தண்டவாளத்தில் உள்ள சிக்னல்களை ஓட்டுநர் கவனிக்க தவறினாலும், ரயிலுக்குள் உள்ள கட்டுப்பாட்டு பலகைக்கு எச்சரிக்கை அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.