குளிரிலும் ஆஷா ஊழியர்கள் போராட்டம் அமைச்சர் காதர் நடத்திய பேச்சு தோல்வி
பெங்களூரு: மாதம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் கடும் குளிரிலும், இரண்டாவது நாளாக ஆஷா ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன் அமைச்சர் காதர் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. கர்நாடகாவின், ஆஷா சுகாதார ஊழியர்கள் மாதம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் காலவரையற்ற போராட்டத்தை நேற்று முன்தினம் துவங்கினர். மயக்கம் இரவு, பகலாக போராட்டம் நடத்துகின்றனர். இதில், மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆஷா ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த தீபா, கடுமையான சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இவர், திடீரென நேற்று மயங்கி விழுந்தார். உடனடியாக, மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். திறந்த வெளி கூடத்தில், கடும் குளிரிலும் போர்வை போர்த்திக் கொண்டு ஊழியர்கள் நேற்று இரவு துாங்கினர். சிலர், சாலையோரத்தில் படுத்து துாங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சுகாதார அமைச்சர் காதர் நேரில் சென்று பேச்சு நடத்தினார். தங்களின் கோரிக்கைகள் குறித்து இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் சிவகுமாரிடம் எடுத்துரைப்பதாக காதர் கூறினார். ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என ஆஷா ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். அமைச்சரின் உறுதிமொழியை ஏற்க மறுத்தனர். போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். அமைச்சர் காதர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். உறுதிமொழிகளை நம்பமாட்டோம். நாங்கள் பல முறை ஏமாற்றப்பட்டு உள்ளோம். இம்முறை ஏமாந்துபோக மாட்டோம்' என்றனர் மதிப்பூதியம் அமைச்சர் காதர் அளித்த பேட்டி: வீடு, வீடாக சென்று சுகாதார பணிகளை செய்யும் ஆஷா ஊழியர்களின் பங்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது. தற்போது, அவர்களுக்கு மாதம் மதிப்பூதியமாக, 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மாநில அரசு 5,000 ரூபாயும், மத்திய அரசு 3,000 ரூபாயும் வழங்குகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தின் முறையை முதலில் சரிசெய்ய வேண்டும். இது, மத்திய அரசின் கையிலேயே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.