பொய் செய்திகளை பரப்புகிறார் முதல்வர் மீது அசோக் குற்றச்சாட்டு
பெங்களூரு : 'மாநிலத்தில் அதிகரிக்கும் மாரடைப்புக்கு, கொரோனா தடுப்பூசி காரணம் என, பொய்யான செய்தி பரப்பும் முதல்வர் சித்தராமையா மீது, எப்போது புகார் அளிப்பீர்கள்' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பினார்.'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று அவர் கூறியதாவது:பொய்யான செய்தி பரப்பும் முதல்வர் சித்தராமையா அரசு, பொய்யான செய்திகளை கட்டுப்படுத்த, சட்டம் கொண்டு வர முற்பட்டுள்ளது. இது இந்த நுாற்றாண்டில் மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.மாநிலத்தில் நடக்கும் மாரடைப்பு இறப்புகளுக்கு, கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என, வல்லுநர்கள் தெளிவுப்படுத்தியதாக, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசிக்கு அவசர, அவசரமாக அனுமதி அளித்து, தடுப்பூசி போடப்பட்டதே மாரடைப்புக்கு காரணம் என, பொய்யான வதந்தி பரப்பும் முதல்வர் சித்தராமையா மீது, எப்போது வழக்கு பதிவு செய்வீர்கள்.பொய் செய்திகளை பரப்பும், பிராண்ட் அம்பாசிடர் முதல்வர் சித்தராமையா. அவர் ஓய்வு பெறும் காலம் நெருங்கி வந்துள்ளது. இதற்காகவே இவர் அகில இந்திய காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவின் தேசிய ஆலோசனை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.உங்கள் சேவை போதும். ராஜினாமா செய்து ஓய்வு பெறுங்கள் என, சோனியாவும், ராகுலும் மறைமுகமாக கூறுகின்றனர். சித்தராமையாவுக்கு தன்மானம் இருந்தால், ஒரு விநாடியும் பதவியில் நீடித்திருக்க மாட்டார்.அரசின் மோசமான நிலை குறித்து, காங்., மூத்த தலைவர் பசவராஜ் ராயரெட்டி உண்மையை பேசியுள்ளார். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால், அவருக்கு, 'சத்யவான்' விருது கொடுத்து கவுரவிப்போம். அவர் புண்ணியவான். இந்த அரசு செல்லும் போது, மக்களின் கையில் சொம்பு கொடுத்துவிட்டு செல்லும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.