ஷிவமொக்கா கூட்டுறவு வங்கி மாஜி தலைவர் சொத்துகள் முடக்கம்
ஷிவமொக்கா: போலியான தங்கத்தை அடமானம் வைத்து, 63 கோடி ரூபாய் கடன் பெற்ற வழக்கில், ஷிவமொக்கா மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மஞ்சுநாத் கவுடா, அவரது மனைவிக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.ஷிவமொக்கா மாவட்ட கூட்டுறவு வங்கியில், முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தியபோது, ஷிவமொக்கா மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் கிளையில் பணம் தவறாக பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர்.போலி தங்கத்தை அடமானம் வைத்து, கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெறப்பட்டது தெரிய வந்தது.முதற்கட்ட விசாரணையில், கூட்டுறவு வங்கியின் அன்றைய தலைவர் மஞ்சுநாத் கவுடாவின் உத்தரவுபடி, கிளை நிர்வாகி ஷோபா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதால், இது பற்றி விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறைக்கு, போலீசார் தகவல் கொடுத்தனர்.அதன்பின் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. மஞ்சுநாத் கவுடா பலரின் பெயரில், போலியான தங்கத்தை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து, 63 கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதை கண்டுபிடித்தது. அதன்பின் அவரது வீடு, அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். ஆவணங்களை கைப்பற்றினர். ஆவணங்களை ஆய்வு செய்ததில், முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.எனவே நடப்பாண்டு ஏப்ரல் 9ம் தேதியன்று, மஞ்சுநாத் கவுடாவை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பெங்களூரு, சாம்ராஜ்பேட்டின் அபெக்ஸ் வங்கியின் விருந்தினர் இல்லத்தில் வைத்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.முறைகேட்டில் சம்பாதித்த பணத்தில், அவர் அசையும், அசையா சொத்துகளை வாங்கியுள்ளார். வருமானத்துக்கும் அதிகமான சொத்துகள் வைத்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே மஞ்சுநாத், அவரது மனைவி பெயரில் இருந்த 13.91 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.