| ADDED : நவ 13, 2025 04:15 AM
பெங்களூரு: ஆட்டோ ஓட்டுநரை அநாகரீகமாக பேசிய வட மாநில தம்பதி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் வட மாநிலத்தை சேர்ந்த ஹிந்தி பேசும் நபர்கள் சண்டையிடுவது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. சில்லறை பிரச்னைக்கு கூட ஓட்டுநர்களிடம் இவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர். இந்த வரிசையில் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்தி பேசும் தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சரியான இடத்தில் இறக்கிவிடவில்லை என கூறி, அநாகரீகமாக பேசத்துவங்கினர். 'எங்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தவில்லை. உன்னை நிர்வாணமாக்கி சாலையிலேயே உதைப்போம்' என, அவர்கள் முறையின்றி பேசுகின்றனர். அதுமட்டுமின்றி ஆட்டோவை சேதப்படுத்த தம்பதி முயற்சித்தனர். இந்த தம்பதி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.