குடிநீர் பிரச்னை தீர்த்து வைக்காத நரேகா குழுவினர் மீது தாக்குதல்
ராய்ச்சூர் : 'குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்கவில்லை' என கூறி, 'நரேகா' திட்ட குழுவினரை, கிராம மக்கள் தாக்கி உள்ளனர்.ராய்ச்சூரின் மஸ்கி பெஞ்சமராடி கிராமத்தில், 'நரேகா' திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட பஞ்சாயத்து நரேகா திட்ட இயக்குநர் சரணபசப்பா, தாலுகா இயக்குநர் அமரேஷ் யாதவ், பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி கிருஷ்ண ஹனுகுண்டா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.அங்கு கூடிய கிராம மக்கள், 'கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் கிராமத்தில், குடிநீர் பிரச்னை உள்ளது. கொளுத்தும் வெயிலில் நரேகா திட்ட பணிகளை தொழிலாளிகள் செய்து வருகின்றனர். அவருக்கு குடிநீர் வசதி கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதுபற்றி மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளிடம், பல முறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நரேகா வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடு நடக்கிறது' என, தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எதுவும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த கிராம மக்கள், அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதையடுத்து கிராம மக்கள் - அதிகாரிகள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகளை தாக்கி, அவர்களை பிடித்து கிராம மக்கள் தள்ளினர். இதுபற்றி அறிந்த மஸ்கி போலீசார், அங்கு சென்று, கிராம மக்களை சமாதானம் செய்தனர். அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.