லஞ்சம் கேட்டு கைதி மீது தாக்குதல்?
பரப்பன அக்ரஹாரா; லஞ்சம் கேட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் கைதியை சிறை அதிகாரிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் கைதான கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.கைதிகளிடம் சில சிறை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதும்; பணம் வாங்கிக் கொண்டு கஞ்சா புகைக்க அனுமதிப்பதும் நடந்துள்ளது. பணம் வாங்கிக் கொண்டு கைதிகளுக்கு, சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்ட செய்திகளும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.இந்நிலையில் திருட்டு வழக்கில் ஹமீத் என்பவரை சோழதேவனஹள்ளி போலீசார் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.கடந்த 5ம் தேதி சில சிறை அதிகாரிகள், நல்ல உணவு கொடுப்பதற்காக, ஹமீத்திடம் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்ததால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் சிறைக்கு தன்னை பார்க்க வந்த தாயிடம், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை பற்றி ஹமீத் கூறி உள்ளார். வக்கீல் உதவியுடன் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்ய, அவரது தாய் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.