போலீசாரை தாக்கி தப்ப முயற்சி: 2 பேர் சுட்டுப்பிடிப்பு
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற இருவரை, பென்டிகேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயக் காலில் சுட்டு பிடித்தார். ஹூப்பள்ளி நகரின் மந்துார் பகுதியை சேர்ந்தவர் மாலிக் ஜான், 27. இவரை முன்பகை காரணமாக, 13ம் தேதி ரவுடி கும்பல், கொடூரமாக வெட்டி கொலை செய்தது. பென்டிகேரி போலீசார் விசாரித்தனர். இதனிடையே கொலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பாலராஜ் என்ற பாலு, பென்டிகேரி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். 'தன் கூட்டாளிகள் இருக்கும் இடத்தை கூறினால், அவர்கள் என்னை கொலை செய்து விடுவர்' என போலீசிடம் அவர் கூறினார். போலீசார் தங்கள் பாணியில் விசாரித்ததில், தனது கூட்டாளிகள், ஹூப்பள்ளியின் புறநகர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருப்பதாக கூறினார். கற்கள் வீசி தாக்குதல் இதையடுத்து, பென்டிகேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயக் தலைமையிலான குழுவினர், அவருடன் நேற்று காலை 6:00 மணிக்கு, அவர் கூறிய இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த ரவுடி கும்பல், போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். அச்சமயத்தில் பாலுவும் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயற்சித்தார். இதனால், இன்ஸ்பெக்டர் நாயக், தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். அவர் தொடர்ந்து ஓடியதால், பாலுவின் காலில் துப்பாக்கியால் சுட்டார். அதே போல, தப்பிக்க முயன்ற மற்றொரு ரவுடி முகமது ஷேக்கின் காலிலும் துப்பாக்கியால் சுட்டார். இவர்கள் இருவரும் தரையில் விழுந்தனர். மருத்துவமனை இவர்களை கைது செய்த போலீசார், கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேசமயம் ரவுடிகள் தாக்குதலில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டுகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் எஸ்.பி., சசிகுமார், மருத்துவமனைக்கு நேரில் வந்து போலீசாரை பார்வையிட்டார். பின், அவர் அளித்த பேட்டி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீசார், விரைவில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர். இதுவரை, இருவர் கைது செய்யப்பட்டனர். சிலரிடம் ரகசிய விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.