ஆட்டோ கட்டணம் உயர்கிறது ரூ.30ல் இருந்து ரூ.36 ஆகிறது?
பெங்களூரு: பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.கர்நாடகாவில் பால், மின்சாரம், குடிநீர் கட்டணம் என அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அத்துடன், ராபிடோ, ஓலா, ஊபர் ஆகிய பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆட்டோ கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திவிட்டனர்.இதை கட்டுப்படுத்தும் வகையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டு நான்கு ஆண்டுகளாகின்றன. 2021 முதல் முதல் 2 கி.மீ.,க்கு குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.பைக் டாக்சிகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் பல போராட்டங்கள் நடத்தினர்.தற்போது குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும்; ஒரு கி.மீ.,க்கு 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறையினரிடம் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதுதொடர்பாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.அவரும், முதல் 2 கி.மீ.,க்கு, குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை 30 ரூபாயில் இருந்து 36 ரூபாயாகவும்; அடுத்த 1 கி.மீ.,க்கு 15 ரூபாயில் இருந்த 18 ரூபாயாகவும் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டால், அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.இதையறிந்த ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர், 36 ரூபாயாக உயர்த்தப்பட்டால், அது சில்லறை பிரச்னையாக மாறும். அதுமட்டுமின்றி, வெறும் ஆறு ரூபாய் உயர்வு, ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்னைகளை தீர்க்காது. எனவே, 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரி உள்ளனர்.