ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சிகிச்சை
பெங்களூரு: தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெற அதிக கட்டணம் வசூலிப்பதால், நோயாளிகள் 'ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில், ஆர்வம் காட்டுகின்றனர்.ஏழை நோயாளிகளுக்கு உயர் தரமான சிகிச்சைகள் இலவசமாகவும், சில சிகிச்சைகள் குறைந்த கட்டணத்திலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு 'ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா' என்ற பெயரில், இந்த திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளது. அதிகரிப்பு
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மூட்டு மாற்று, இதய வால்வு மாற்றம் உட்பட பல அறுவை சிகிச்சைகளுக்கு, தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களால் இவ்வளவு செலவு செய்ய முடியாது. எனவே 'ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து கொள்கின்றனர்.இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 2020ல் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை எட்டு லட்சமாக இருந்தது. ஆனால் 2024ல் இந்த எண்ணிக்கை 35 லட்சமாக அதிகரித்துள்ளது. திட்டத்தின் பயளாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆரோக்கிய கார்டுகள், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கார்டின் உதவியால், நாட்டின் எந்த பகுதியிலும் சிகிச்சை பெறலாம்.இத்திட்டத்தின் கீழ், சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவனைகளுக்கு, சுவர்ண சுரக்ஷா டிரஸ்ட் மூலம், நோயாளிகளின் சிகிச்சைக்கான தொகை வழங்கப்படுகிறது. இதனால் அரசு வழங்கும் நிதியை டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பயன்படுகிறது.திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட தனியார் மருத்துவமனைகளிலும், நோயாளிகள் சிகிச்சை பெறலாம். ஆனால் விபத்து உட்பட, அவசர நேரங்களில் மட்டும், நேரடியாக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல அனுமதி உள்ளது.அதே போன்று, குறிப்பிட்ட நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வசதி இல்லை என்றால், சிபாரிசு கடிதம் பெற்று கொண்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லலாம். இலவசம்
இத்திட்டம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. திட்டத்தின் கார்டு இல்லையென்றாலும், ரேஷன்கார்டு பயன்படுத்தி சிகிச்சை பெறலாம். ஏ.பி.எல்., கார்டுதாரர்கள் சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களுக்கு சிகிச்சை செலவில் 30 சதவீதம் தொகை, திட்டத்தின் கீழ் வழங்கப்படும். பி.பி.எல்., கார்டுதாரர்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.