செடிகளுக்குள் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
தொட்டபல்லாபூர்: நவ. 10-: ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், செடிகளுக்குள் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை பொது மக்கள் காப்பாற்றினர். பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், திருமகொண்டனஹள்ளி கிராமத்தின், காலியான லே - அவுட் அருகில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் இளைஞர்கள் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், குழந்தையின் அழுகுரல் கேட்டதால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள், தேடி பார்த்த போது, செடிகளுக்குள் பச்சிளம் ஆண் குழந்தை இருப்பது தெரிந்தது. பிறந்து ஒரு வாரமே ஆகியிருந்தது. அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தொட்டபல்லாபூர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் நலன் குறித்து விசாரித்தனர். சிகிச்சைக்கு பின் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக, டாக்டர்கள் கூறினர். இளைஞர்கள் கவனித்திருக்காவிட்டால், அபாயம் ஏற்பட்டிருக்கும். குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க, போலீசார் முயற்சிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர்.