| ADDED : டிச 27, 2025 06:33 AM
பெங்களூரு: கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கி உள்ளது. பெங்களூரு பாரதிநகர் ரவுடி சிவகுமார் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் தலைமறைவாக உள்ளார். முன்ஜாமின் கேட்ட அவரது மனுவை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி பசவராஜ் விசாரித்தார். நேற்று நடந்த விசாரணையின் போது எம்.எல்.ஏ., சார்பில் ஆஜரான வக்கீல் சந்தேஷ் சவுதா வாதிடுகையில், ''வழக்கில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள குற்றப்பத்திரிகையில், மனுதாரர் பெயர் உள்ளது. ஆனால் கொலையில் அவரது பங்கு என்ன என்பது பற்றி தெளிவான விளக்கம் இல்லை. இதனால் அவருக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்,'' என்றார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி பசவராஜ், மனுதாரருக்கு அடுத்த மாதம் 6 ம் தேதி வரை, இடைக்கால முன்ஜாமின் வழங்கி, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார். மனுதாரரை கைது செய்தாலும் அவரை உடனே விடுவிக்க வேண்டும். மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.