பெங்களூரு: பொழுது போக்கு விளையாட்டுகள் மூலமாக, சிறார்களுக்கு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பால பவனில் அமைக்கப்பட்ட 'டிராபிக் பார்க்' சீர் குலைந்துள்ளது. பெங்களூரு கப்பன் பூங்காவில் உள்ள பால பவனில் சில ஆண்டுகளுக்கு முன், சிறார்களுக்காக ஒன்றரை ஏக்கரில், 'டிராபிக் பார்க்' அமைக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த பார்க் அமைக்கப்பட்டது. இதற்காக 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டது. விதிமுறைகள் சிறார்களுக்கு பொழுது போக்கு விளையாட்டுகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், மனதில் ஆழமாக பதியும் என தோட்டக்கலைத்துறை கருதியது. இந்த பார்க்குக்கு வரும் சிறார்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள், சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது உட்பட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, தகவல் தெரிவிக்கப்பட்டது நல்ல நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இப்பார்க் சரியான நிர்வகிப்பு இன்றி சீர் குலைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்ட செயற்கை கற்பாறையில், விரிசல் ஏற்பட்டது. அதன்பின் ஐந்து லட்சம் ரூபாய் செலவிட்டு புதுப்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது அதே நிலைக்கு சென்றுள்ளது. சிறார்களுக்கு செயல் முறையில் விளக்கும் வகையில், ஐந்து எலக்ட்ரிக் பைக்குகள், 10 கார்கள், ஐந்து சைக்கிள்கள் வாங்கப்பட்டன. இவைகளும் பயன்படுத்தப்படாமல், துருப்பிடிக்கின்றன. 'டிராபிக் பார்க்' க்கில் இரண்டு இடங்களில், டிராபிக் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தாததால் பழுதடைந்துள்ளன. சாலை திருப்பத்தின் அடையாளங்கள், ஜீப்ரா கிராசிங் அழிந்துள்ளது. தேவையற்ற செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. செயற்கை பாறையில் விரிசல் ஏற்பட்டதை, காரணம் காட்டி, பார்க்கை மூடியுள்ளனர். பெரிய மரம் விழுந்து சிறார்களின் விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்துள்ளன. இதை பழுது பார்க்கவில்லை. இது பொது மக்களுக்கு, அதிருப்தி அளித்துள்ளது. தரமான வாகனங்கள் இது குறித்து பாலபவன் அதிகாரிகள் கூறியதாவது: பாலபவன் வளாகத்தில், 40 லட்சம் ரூபாய் செலவில் 30 அடி உயரம், 12 அடி அகலமான செயற்கை பாறைகள் அமைக்கப்பட்டன. இதில் விரிசல் ஏற்பட்டதால், சிறார்களின் பாதுகாப்பை கருதி டிராபிக் பார்க்கை மூடியுள்ளோம். புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் வாகனங்களின் தரம் சரியில்லை. சிறார்கள் இதில் அமர்ந்து, ஒன்றிரண்டு சுற்று வந்தாலே பேட்டரி டவுனாகிறது. இதனால் அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை. தரமான வாகனங்கள் வாங்கப்படும். புதிதாக செயற்கை பாறைகள் உருவாக்க, டெண்டர் அழைத்துள்ளோம். விரைவில் டிராபிக் பார்க் திறக்கப்படும். சிறார்களை மொபைல் பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும், அவர்களின் திறமையை மேம்படுத்தவும், மன ரீதியில் வலுப்படுத்த உதவும் விளையாட்டுகளை, பாலபவனில் ஏற்பாடு செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.