உடல் உறுப்பு தானம் பல்லாரி முதலிடம்
பெங்களூரு: கர்நாடகாவில் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களில் பல்லாரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கர்நாடகாவில் அதிகமாகும். கடந்த ஆண்டு கர்நாடகாவில் 38,412 பேர் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர்.நடப்பாண்டில் பல்லாரியில் 9,273; தார்வாட் 9,006; பெங்களூரு நகரம் 2,654; பெலகாவி 1,273; ஹாவேரி 1,154; மைசூரு 644; உத்தர கன்னடா 623; பெங்களூரு ரூரல் 574; கதக் 439; கலபுரகி 409; பாகல்கோட் 396 என உடல் உறுப்பு தானம் செய்வற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் உடல் உறுப்பு தானத்தில் பல்லாரி மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்களில், விழிப்புணர்வு பிரசாரம் தீவிரப்படுத்தப்படும். இது தவிர, உறுப்பு தானம் செய்வோரை, முதல்வர் சித்தராமையா கவுரவிக்க ஏற்பாடுகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், 'notto.abdm.gov.in' என்ற இணையதளத்திற்கு சென்று, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.