உச்ச நீதிமன்றம் இறுதி கெடு விதித்திருந்த நிலையில் ஜி.பி.ஏ., தேர்தலுக்கு அவகாசம் கேட்டு அரசு மனு
பெங்களூரு: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள், ஜி.பி.ஏ., தேர்தலை நடத்தி முடிக்க, கர்நாடக தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ள நிலையில், டிசம்பர் 31ம் தேதி வரை, அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், ஜி.பி.ஏ., தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், மாநகராட்சியாக இருந்த போது, கடந்த, 2015ல் கடைசியாக தேர்தல் நடந்தது. 2020ல் தேர்தல் நடந்திருக்க வேண்டும். வார்டுகள் எண்ணிக்கை உயர்வு, வார்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் தள்ளி போனது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மாநகராட்சியை கலைத்து விட்டு, ஜி.பி.ஏ., எனும், கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தை அமைத்து, அந்த ஆணையத்தின் கீழ் சென்ட்ரல், வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு என, ஐந்து மாநகராட்சிகளை அமைத்து உள்ளது. ஆனாலும் தேர்தல் நடத்தாமல் இழுத்தடிக்கின்றனர். ஐந்து மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஜனவரி 12ம் தேதி தேர்தல் தொடர்பாக தீர்ப்பு கூறிய நீதிபதிகள், கடந்த ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தனர். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு, எஸ்.ஐ.ஆர்., பணிகளால், தேர்தல் நடத்தும் தேதியை, செப்டம்பர் 30ம் தேதி வரை ஒத்திவைக்க, தேர்தல் ஆணையம், கர்நாடக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோயமால்யா பாக் ஷி, விபுல் எம் பஞ்சோலி அமர்வு விசாரித்து வந்தது. இதுவே கடைசி கடந்த மே மாதம் 20ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கை பார்க்கும் போது, மாநில அரசு வேண்டுமென்றே தேர்தலை, ஒத்திவைக்க முயற்சி செய்வது போல தெரிகிறது. ஜி.பி.ஏ.,வின் கீழ் வரும் ஐந்து மாநகராட்சிகளுக்கும், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்த இறுதி கால கெடு விதிக்கிறோம். செப்டம்பர் வரை கால அவகாசம் கொடுக்க முடியாது. கால அவகாசத்தை நீட்டிப்பது இதுவே கடைசி' என்றனர். இதனால் ஐந்து மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடந்தே தீரும் என, மக்கள் ஆர்வமாக இருந்தனர். அரசும் தேர்தலுக்கான பணிகளை முடுங்கி விடுவது போல பணியாற்றியது. இந்நிலையில், ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், ஜி.பி.ஏ., தேர்தல் தொடர்பாக நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: கர்நாடகாவில் தற்போது, எஸ்.ஐ.ஆர்., எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடக்கிறது. இப்பணியின் கீழ் ஒவ்வோர் ஓட்டு சாவடி நிலை அதிகாரிகளும் வீடு, வீடாக சென்று வாக்காளர் விபரங்களை சேகரித்து வருகின்றனர். பூட்டப்பட்டு இருக்கும் வீடுகளுக்கு குறைந்தது மூன்று முறையாக சென்று பார்க்க வேண்டி உள்ளது. ஜி.பி.ஏ., தேர்தலை நடத்த, 56,000 அரசு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது மாநகராட்சிகளின் ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் ஈடுபடுவதால், தேர்தல் நடத்த ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. வீடுகள் மாற்றம் பெங்களூரு நகரில் மக்கள் அடிக்கடி வீடுகளை மாற்றுவதால், துல்லியமான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதில் நிர்வாக சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஆகஸ்ட் 5ம் தேதி தான், தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. செப்டம்பர் 25ம் தேதி வரை ஆட்சேபனை பரிசீலிக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் உள்ள பழைய வாக்காளர் பட்டியலை வைத்து தேர்தல் நடத்தினால், அது ஜனநாயக நடைமுறையின் நம்பிக்கையை கெடுத்து விடும். புதிய மற்றும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல், அக்டோபர் 7ம் தேதி தான் முழுமையாக தயாராகும் என்பதால், அதற்கு முன், ஜி.பி.ஏ.,வின் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. இதனால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்கனவே விதித்த ஆகஸ்ட் 31ம் தேதி காலகெடுவை, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தோல்வி பயம் முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். இதற்கான பணிகளும் நடந்தன. ஆனால், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, தேர்தல் தேதி காலகெடுவை நீட்டிக்க, ஜி.பி.ஏ., அவகாசம் கேட்டுள்ளது. நீதிமன்றம் என்ன சொல்கிறது என பார்த்துவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.