பப்பில் வங்கி மேலாளர் மர்மச்சாவு
ராஜராஜேஸ்வரி நகர்: தனியார் வங்கி மேலா ளர், 'பப்' ஒன்றின் கழிப்பறையில் சந்தேகத்துக்கு இடமாக உயிரிழந்து கி டந்தார். பெங்களூரின் உல்லால் பிரதான சாலையில் வசித்தவர் மேகராஜ் என்ற மேகானந்த், 31. இவர் தனியார் வங்கியொன்றில் மேலாளராக பணியாற்றினார். இவர் நேற்று முன் தினம், தன் மூன்று நண்பர்களுடன், ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள, 'பப்'புக்கு வந்திருந்தார். மது அருந்திவிட்டு, உணவு சாப்பிட்டார். நள்ளிரவு 12:00 மணியளவில் 'பப்'பில் மது சப்ளை நிறுத்தப்பட்டது. 12:45 மணியளவில் பில் தொகையை கட்டிவிட்டு வெளியே வந்தபோது, வாந்தி வருவதை போல் மேகராஜ் உணர்ந்தார். நண்பர்களிடம் கூறிவிட்டு கழிப்பறைக்குச் சென்றார். நீண்ட நேரமாக காத்திருந்தும், மேகராஜை காணாததால் நண்பர்கள், 'பப்' ஊழியர்களிடம் விஷயத்தை கூறினர். ஊழியரும் கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது, மகளிர் கழிப்பறைக்குள் மேகராஜ் நுழைவது தெரிந்தது. அங்கு சென்றபோது, கழிப்பறையின் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. 'பப்' ஊழியர்கள், கழிப்பறை கதவை உடைத்து, உள்ளே பார்த்தபோது, மேகராஜ் மயங்கி கிடந்தது தெரிந்தது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மேகராஜின் சகோதரர் வினய், ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் விசாரணையை துவக்கினர். மேற்கு மண்டல டி.சி.பி., கிரிஷ் கூறுகையில், “சம்பவம் நடந்த இடத்துக்கு, போலீஸ் குழுவினர் சென்று, ஆய்வு செய்தனர். மேகராஜின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். உடல் உறுப்பு மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அறிக்கை வந்தவுடன், இறப்புக்கான காரணம் தெரியும்,” என்றார்.