மது அருந்த மிக்சர் தராத பார் கேஷியர் கொலை
கோலார்: மது குடிக்க மிக்சர் கொடுக்காததால், பார் கேஷியரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர். ஹாசனை சேர்ந்தவர் குமார், 45. இவர் கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின், லக்கூரு கிராமத்தில் உள்ள, 'அசோக் ஒயின்ஸ்'சில் உள்ள பாரில் கேஷியராக பணியாற்றினார். இதே கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல பணிக்கு சென்றிருந்தார். இங்கு மது குடிப்பதற்காக சுபாஷ், 33, என்பவர் வந்தார். மது குடிக்கும்போது, மிக்சர் கேட்டார். குமார் மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவரை பழிவாங்க சுபாஷ் முடிவு செய்தார். பார் மூடும் வரை வெளியே காத்திருந்தார். பாரை மூடிய குமார், வீட்டுக்கு நடந்து செல்லும்போது, பின்தொடர்ந்தார். குமார் வீட்டருகில் சென்றபோது, அவரது மனைவியும், பிள்ளைகளும் வெளியே நின்றிருந்தனர். அவர்கள் கண் முன்னால், குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சுபாஷ் தப்பியோடினார். இதுகுறித்து, மாலுார் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. கொலையாளியை போலீசார் தேடுகின்றனர்.