எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை பசவராஜ் ராயரெட்டி கருத்து
கொப்பால்: ''அமைச்சர் பதவிக்காக, டில்லி சென்றுள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு நல்லது நடக்கட்டும். அவர்கள் அமைச்சர் பதவி கேட்பதில் தவறு இல்லை,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் ராயரெட்டி கூறினார். இதுகுறித்து, கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி: அடுத்த இரண்டு ஆண்டுகள், சித்தராமையாவே முதல்வர் பதவியில் நீடிப்பார். அவரது தலைமையில் காங்கிரஸ் நல்லாட்சி அளிக்கிறது. அமைச்சரவையை எப்போது மாற்றி அமைக்க வேண்டும் என்பது பற்றி, முதல்வர் சித்தராமையாவும், கட்சி மேலிடமும் தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் பதவி கேட்டு, டில்லிக்கு சென்றுள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு நல்லது நடக்கட்டும். அமைச்சரவையை மாற்றி அமைக்கும் போது, அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கட்டும். அவர்கள் அமைச்சர் பதவி கேட்பதில், எந்த தவறும் இல்லை. அது, அவர்களின் உரிமை. என்னை அமைச்சராகும்படி கூறினால் மட்டுமே, அமைச்சராவேன். வேண்டாம் என்றால் விட்டு விடுவேன். 2028ல் எங்களுடைய அரசு, ஆட்சிக்கு வரும். வாக்குறுதி திட்டங்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன. எனவே அடுத்த முறையும் எங்கள் அரசு அமையும். அப்போது, நானும் அமைச்சர் பதவிக்கு முயற்சிப்பேன். மத்திய அரசு, பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வர முன் வந்தது வரவேற்கத்தக்கது. இந்த மசோதாவை அமல்படுத்தட்டும். பெண்களுக்கு சரியான அந்தஸ்து கிடைக்க வேண்டும். லோக்சபா தொகுதிகளை மறு சீராய்வு செய்ய வேண்டும். ஆனாலும், இவ்வளவு விரைவாக, அதற்கான பணிகளை துவக்கியது சரியல்ல. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, பிரதமர் ஆலோசித்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவசரம் காட்டக்கூடாது. வட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள், நமக்கு தொகுதிகளை குறைக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.