ஒரு மரக்கன்றுக்கு ரூ.3,108 செலவு பெங்., மாநகராட்சி சர்ச்சை திட்டம்
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் 34,000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வனப்பிரிவு முடிவு செய்துள்ளது. ஒரு மரக்கன்றுக்கு 3,108 ரூபாய் செலவிட முற்பட்டது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.'கே - ரைட்' எனும் கர்நாடக ரயில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு என்டர்பிரைசஸ் சார்பில் செயல்படுத்தும் திட்டத்துக்காக, மரங்கள் வெட்டப்படுகின்றன. இதற்கு மாற்றாக, மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கும் பொறுப்பை பெங்களூரு மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளது.மஹாதேவபுரா, பொம்மனஹள்ளி மண்டலங்களில் மரக்கன்றுகள் நட்டு, ஐந்தாண்டுகள் பராமரிக்கும் பணிக்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இரண்டு மண்டலங்களிலும் ஒன்பது கட்டங்களில் 34,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மரக்கன்றுக்கு 3,108 ரூபாய் செலவிட, வனப்பிரிவு முடிவு செய்துள்ளது. இது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.மாநகராட்சி, ஒரு மரக்கன்றுக்கு 3,000க்கும் மேற்பட்ட தொகையை செலவிடுவது, இது முதன் முறையல்ல. தாபஸ்பேட் - தொட்டபெலவங்களா இடையிலான புறநகரில் அமைக்கப்படும் சாட்டிலைட் டவுன் வட்ட சாலையின் இரண்டு ஓரங்களிலும், 10,900 மரக்கன்றுகள் நடுவதற்கு, 3.4 கோடி ரூபாய் செலவிட, 2024 ஜூலையில் டெண்டர் அழைத்து, பணி உத்தரவு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், செடிகள் நடப்பட்டதற்கான அடையாளமே இல்லை.மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும், 1,13,500 மரக்கன்றுகள் நட, 2024ல் 21.36 கோடி ரூபாய் செலவிட்டது. மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, இவ்வளவு செலவிட வேண்டியது அவசியமா என, பொது மக்கள் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே மீண்டும் மரக்கன்றுகள் நடுவதற்கு மாநகராட்சி முற்பட்டுள்ளது.இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜய் கூறியதாவது:ஒரு மரக்கன்றுக்கு 3,000 ரூபாய்க்கும் அதிகமாக செலவிட வேண்டிய அவசியம் இல்லை. எப்படிப்பட்ட மரக்கன்றாக இருந்தாலும், 6 அடிகள் வளர்ந்திருந்தாலும், அதிகபட்சம் 200 ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால் மாநகராட்சி 3,000 ரூபாய்க்கும் அதிகமாக செலவிடுகிறது. இது தண்ட செலவாகும்.இதுவரை லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டதாக, மாநகராட்சி கூறுகிறது. ஆனால் மரக்கன்றுகள் நட்டதாக தெரியவில்லை. நட்ட மரக்கன்றுகளையும் பராமரித்து பாதுகாக்கவில்லை. பணத்தை செலவிட வேண்டும் என்ற ஒரே நோக்கில், இத்தகைய திட்டத்தை வகுக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.