இருசக்கர வாகன திருட்டு அதிகரிப்பு பெங்களூரு போலீசார் எச்சரிக்கை
பெங்களூரு : பெங்களூரில் இரு சக்கர வாகன திருட்டு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்துவது, போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக, இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்தது. போலீசாரின் கடுமையான நடவடிக்கை எடுத்ததால், திருட்டு குறைந்திருந்தது. ஆனால் தற்போது வாகன திருட்டு கும்பல், மீண்டும் தலை காட்ட துவங்கியுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வரும் திருட்டு கும்பல், நகரில் உள்ள திருடர்களின் உதவியுடன், இரு சக்கர வாகனங்களை திருடிக்கொண்டு தப்புகின்றனர்.சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்று வருவதற்குள் வாகனம் திருட்டு போகிறது. வீடு, வங்கி, கடைகள், வர்த்தக மையங்கள் என, பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், சில நிமிடங்களில் திருடு போகிறது. இவற்றை கண்டுபிடிப்பது நகர போலீசாருக்கு, பெரும் தலைவலியாக உள்ளது. இரு சக்கர வாகனங்கள் திருட்டை கட்டுப்படுத்தும்படி, நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தென் கிழக்கு மண்டலங்களில், இரு சக்கர வாகன திருட்டு அதிகரித்துள்ளது. இரண்டரை ஆண்டுகளின் புள்ளி - விபரங்களை கவனித்தால், கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இரண்டரை ஆண்டுகளில், 13,394 இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டன. இவற்றில் 4,500 வாகனங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து பஸ்சில் வரும் திருடர்கள், போலியான ஆவணங்களை கொடுத்து ஹோட்டல், லாட்ஜ்களில் தங்குகின்றனர். இரவு நேரத்தில் பல பகுதிகளில் சுற்றி வருகின்றனர். வீட்டின் வெளிப்பகுதியில் நின்றிருக்கும் இரு சக்கர வாகனங்களை நோட்டம் விடுகின்றனர். அதன்பின் அறையை காலி செய்து விட்டு, கள்ளச்சாவி போட்டு இரு சக்கர வாகனங்களை திருடிக்கொண்டு, அதே வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.அங்கு குறைந்த விலைக்கு, வாகனத்தை விற்கின்றனர். சிலர் வாகனங்களின் உதிரி பாகங்களை கழற்றி விற்கின்றனர். இதனால் திருட்டு வாகனங்களை கண்டுபிடிப்பது கஷ்டம். ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு வந்து, கள்ளச்சாவி போட்டு 32 இரு சக்கர வாகனங்களை திருடியவரை, ஹெச்.ஏ.எல்., போலீஸ் நிலைய போலீசார், ஆந்திராவில் கைது செய்தனர். இவரிடம் விசாரித்த போது, பெங்களூரின் திருடர்கள், ஆந்திர திருடர்களுக்கு உதவியது தெரிய வந்தது. மொத்தம் 100 வாகனங்களை திருடிய நபரை, சில நாட்களுக்கு முன், கே.ஆர்.புரம் போலீசார் கைது செய்தனர். இவர் விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே திருடிக்கொண்டு ஆந்திராவுக்கு கொண்டு சென்றது தெரிந்தது. திருட்டு வாகனங்களின் நம்பர் பிளேட், இன்ஜின் எண்ணை மாற்றி, வெளிமாநிலங்களில் விற்பதால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கஷ்டம். இரு சக்கர வாகனங்கள் திருட்டை கட்டுப்படுத்த, போலீசாரின் ஆலோசனைகளை வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். வலுவான ஹேண்டில் லாக் பயன்படுத்துவது நல்லது. சாவியை வாகனத்தில் விட்டு செல்ல கூடாது. வெளிச்சமான, கண்காணிப்பு கேமராக்கள் உள்ள இடங்களில், வாகனத்தை நிறுத்த வேண்டும். திருடர்கள் கள்ளச்சாவி போட்டு, வாகனத்தை திருட முயற்சித்தால் எச்சரிக்கும் வகையில், சைரன் பொருத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.