புறாக்களுக்கு உணவளிக்க தடை பறவைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு
பெங்களூரு: பொதுஇடங்களில் புறாக்களுக்கு உணவு அளிக்க தடை விதிக்கப்பட்டதற்கு, பறவைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவு அளிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக, மாநில அரசு அறிவித்தது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாலும், புறாக்களுக்கு உணவு அளிக்க தடை செய்யப்பட்டதாகவும் கூறியது. அதே சமயம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புறாக்களுக்கு உணவு வழங்கலாம். நேர கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதற்கு பறவைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால், புறாக்கள் பசியோடு தவிக்கும் என, வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே, மாநில அரசு இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.