உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்க முடியாது பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபம்

ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்க முடியாது பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபம்

பெங்களூரு : “காங்கிரஸ் அரசால் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்க முடியாது,” என, நரகுந்த் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான சி.சி.பாட்டீல் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம், மத்திய அரசுக்கு தான் உள்ளது. இங்கு காங்கிரஸ் அரசால் நடத்தப்படும் கணக்கெடுப்பை ஏற்க முடியாது. இந்த கணக்கெடுப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கணக்கெடுப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. காங்கிரஸ் அரசு நடந்து கொள்ளும் விதம் புரியாத புதிராக உள்ளது. ஒரு முறை ஜாதிவாரி கணக்கெடுப்பு என்கின்றனர்; இன்னொரு முறை சமூக, கல்வி கணக்கெடுப்பு என்கின்றனர். தன் நாற்காலியை காப்பாற்றி கொள்ளவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை முதல்வர் சித்தராமையா நடத்துகிறார். கட்சி, ஆட்சியில் அவருக்கு எதிர்ப்பு உள்ளது. 15 நாட்களில் கணக்கெடுப்பை நடத்தி முடிப்பது சாத்தியமற்றது. இன்று தேர்தல் நடந்தாலும் பா.ஜ., அபார வெற்றி பெறும். சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும். பஞ்சமசாலி மடத்தின் தலைவர் பதவியில் இருந்து, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமியை நீக்கி இருப்பதை ஏற்க முடியாது. இவருடன், ஒட்டுமொத்த பஞ்சமசாலி சமூகமும் உள்ளது. அவருக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. விரைவில் மடாதிபதியை சந்தித்து பேசுவோம். பஞ்சமசாலி சமூகத்திற்காக இரவு, பகலாக உழைத்துள்ளார். எதற்கும் அவர் ஆசைப்பட்டது இல்லை. '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு 750 கி.மீ., பாதயாத்திரை நடத்தினார். அதை எல்லாம் மறந்துவிட்டனர். மடாதிபதியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய விவகாரத்தில், ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் உள்ளார். பெங்களூரில் சாலைப் பள்ளங்களை மூடும் விஷயத்தில், அரசு அலட்சியமாக உள்ளது. இதுபோன்ற மோசமான அரசை நான் பார்த்தது இல்லை. மழை பெய்யும் நேரத்தில், சாலைப் பள்ளங்களை மூடுகின்றனர். ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு அறிவு இல்லையா என நினைக்க தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை