உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது!: 11 பேர் பலி சம்பவத்தில் அரசை கண்டித்து போராட்டம்

முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது!: 11 பேர் பலி சம்பவத்தில் அரசை கண்டித்து போராட்டம்

ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் நிகழ்ச்சி, பெங்களூரு விதான் சவுதா, சின்னசாமி மைதானத்தில் கடந்த 4ம் தேதி நடந்தது. சின்னசாமி மைதானம் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த காமாட்சி தேவி, 29 உட்பட 11 பேர் பலியாகினர்.இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, மாஜிஸ்திரேட், சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. 'சரியான ஏற்பாடுகள் இன்றி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தததால் 11 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்' என்று, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அப்பாவிகள் பலி

இந்நிலையில், 11 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பதவி விலக கோரியும் பெங்களூரு சுதந்திர பூங்காவில் பா.ஜ., சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் சட்டசபை அசோக், மேல்சபை சலவாதி நாராயணசாமி, கொறடாக்கள் சட்டசபை தொட்டனகவுடா பாட்டீல், மேல்சபை ரவிகுமார், எம்.பி.,க்கள் மோகன், கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்ட தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.போராட்டத்தில் விஜயேந்திரா பேசுகையில், ''சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது துணை முதல்வர் சிவகுமார் தான். ஆர்.சி.பி., அணியை யார் கவுரவிப்பது என்று முதல்வர், துணை முதல்வர் இடையில் போட்டி ஏற்பட்டது. அவர்களுக்கு இடையிலான போட்டி, பைத்தியகாரத்தனத்தால் 11 அப்பாவிகள் பலியாகி உள்ளனர். இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று சித்தராமையாவும், சிவகுமாரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்.

விளம்பர நோக்கம்

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசியதாவது:ஆர்.சி.பி., பாராட்டு விழா நிகழ்ச்சியை கொண்டாட வாருங்கள் என்று, ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தது அரசு தான். வாருங்கள்... வாருங்கள் என்று அழைத்து 11 பேர் உயிரை பறித்து விட்டனர். இறந்தவர்கள் குடும்பத்தினர் விடும் சாபத்தால் இந்த அரசு நீண்ட காலம் நீடிக்காது. அரசு செய்த தவறுக்கு, போலீஸ் அதிகாரிகள் பலிகடா ஆகி விட்டனர். உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ஹேமந்த் நிம்பால்கரை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை.போலீஸ் அதிகாரிகள் அனுமதி கொடுக்காத போதும், வலுக்கட்டாயமாக நிகழ்ச்சியை நடத்தினர். விளம்பர நோக்கத்திற்காக விதான் சவுதா முன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 11 பேர் பலியானது பற்றி தெரிந்தும், சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சி நடத்தினர். அவர்களின் மனசாட்சி செத்து விட்டதா. இந்த அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும். அரசை அகற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஊர்வலம்

இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள முதல்வரின் காவிரி இல்லத்தை முற்றுகையிட பா.ஜ., தலைவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலையில் இரும்பு தடுப்புகளை வைத்து பா.ஜ., தலைவர்கள், தொண்டர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசார், பா.ஜ., தொண்டர்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து அசோக், சலவாதி நாராயணசாமி, விஜயேந்திரா, அஸ்வத் நாராயணா, மோகன் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், தொண்டர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி சென்றனர். சிறிது நேரத்திற்கு பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் சுதந்திர பூங்காவை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை