காங்கிரஸ் ஆடும் நாடகத்துக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் பாரதிய ஜனதா கிண்டல்
பெங்களூரு: 'காங்கிரஸ் தலைவர்கள் நடத்தும் நாடகத்துக்கு, 'ஆஸ்கர்' விருதே கொடுக்கலாம்' என, கர்நாடக பா.ஜ., கிண்டல் செய்துள்ளது. இது குறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் பா.ஜ., நேற்று கூறியதாவது: காங்கிரசுக்குள் நடந்து வரும்,' ஹை வோல்டேஜ்' அரசியல் நிலவரங்கள் நகைப்புக்குரியது. இக்கட்சி தலைவர்கள் நடத்தும் நாடகத்துக்கு, சர்வதேச அளவிலான ஆஸ்கர் விருதே கொடுக்க வேண்டும். பதவிக்காக முட்டி மோதுகின்றனர். காங்கிரசில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள், முட்டாள்தனமானது. ஊழல் அரசியலில் பிரதி பிம்பம். மாநில மக்கள் வறட்சி, பணவீக்கம், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் தத்தளிக்கின்றனர். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள், பதவிக்காக சினிமா பாணியில் நாடகமாடுகின்றனர். பதவி நாற்காலியை விட்டு, கீழே இறங்கும் போது, கண்ணீர் விடுவதும், மற்றொருவரின் காலை தொட்டு நமஸ்கரிப்பதும், மக்களின் கண்களில் மண்ணை துாவும் தந்திரமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.