ஹாசனாம்பா உற்சவ ஏற்பாடுகளில் முறைகேடு பா.ஜ.,வின் தேவராஜேகவுடா குற்றச்சாட்டு
ஹாசன் : ''ஹாசனாம்பா உற்சவத்துக்கு முன்னேற்பாடுகள் செய்வதில், முறைகேடு நடந்துள்ளது. டெண்டர் முடிவு செய்வதற்கு முன்பே, பணிகளை துவக்க அனுமதி அளித்தது, சந்தேகத்துக்கு இடமளிக்கிறது,'' என வக்கீலும், பா.ஜ., பிரமுகருமான தேவராஜே கவுடா குற்றம்சாட்டினார். இது குறித்து, ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி: நடப்பாண்டு ஹாசனாம்பா உற்சவத்துக்கு, இன்னும் சில நாட்களே உள்ளன. அக்டோபர் 9 முதல் 23 வரை ஹாசனாம்பாவை தரிசிக்க அனுமதி இருக்கும். இம்முறையும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இவர்களை வரவேற்க, மாவட்ட நிர்வாகம் ஹாசன் நகரை அலங்கரித்துள்ளது. பேரிகேட் பொருத்துவது, டெண்ட் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என, பல்வேறு பணிகளுக்கு டெண்டர் அழைக்கப்பட்டது. இதில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது. 20 லட்சம் ரூபாய் விலையில் கண்காணிப்பு கேமராக்களை வாங்கலாம். ஆனால் வாடகைக்கு பெற, 60 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் அழைத்துள்ளனர். 74 லட்சம் ரூபாய் செலவில் செய்யக்கூடிய பணிகளுக்கு, 86.99 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் அளித்துள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளாக, ஒரே நபருக்கு அதிகாரிகள் டெண்டர் அளிக்கின்றனர். கடவுளின் பெயரில் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். டெண்டர் முடிவு செய்யும் முன்பே, பணிகள் துவங்கப்பட்டது சந்தேகம் ஏற்படுத்துகிறது. ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய வழங்கப்படும் பாஸ்களிலும் கோல்மால் நடக்கிறது. நடப்பாண்டும் வி.ஐ.பி., பாஸ்களை ரத்து செய்து, கோல்டு பாஸ் வழங்குகின்றனர். ஹாசனாம்பா உற்சவத்துக்கு தயாராகும் பெயரில், லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் செய்கின்றனர். இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும். தகுதியானவர்களுக்கு டெண்டர் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.