உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு : கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெங்களூரு சிவாஜிநகர் அம்பேத்கர் வீதியில், விதான் சவுதா எதிரே கர்நாடக உயர் நீதிமன்றம் உள்ளது. நேற்று மதியம் 2:00 மணிக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பரத் குமாரின், மின்னஞ்சலுக்கு குறுந்தகவல் வந்தது. 'உயர் நீதிமன்ற வளாகத்தில் மூன்று ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நீதிபதிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் குண்டுவெடித்து விடும்' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரத் குமார், விதான் சவுதா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மோப்ப நாயுடன் சென்ற போலீசார், உயர் நீதிமன்ற வளாகம், அலுவலக அறைகளில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இதுகுறித்து பதிவாளர் அலுவலக ஊழியர் ராஜேஸ்வரி அளித்த புகாரில், விதான் சவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.