உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / படுக்கையில் புகுந்த பாம்பு உயிர் தப்பிய அண்ணன், தங்கை

படுக்கையில் புகுந்த பாம்பு உயிர் தப்பிய அண்ணன், தங்கை

பெங்களூரு: இரவு முழுதும், படுக்கையறையில் புகுந்த பாம்பின் மீது உறங்கிய அண்ணன், தங்கை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெங்களூரு நகர், பாகல்குன்டே, பைரவேஸ்வர நகரில் அண்ணன், தங்கை வசிக்கின்றனர். அவர்கள் அக்டோபர் 21ம் தேதி இரவு, உறக்கத்தில் இருந்தனர். சிறிது நேரத்துக்குப் பின், வீட்டின் காம்பவுன்டுக்குள் நுழைந்த பாம்பு, ஜன்னலை ஒட்டி வைத்திருந்த வாஷிங் மெஷின் மீது ஏறி, திறந்திருந்த படுக்கை அறைக்குள் புகுந்தது. உறக்கத்தில் இருந்த அண்ணன், தங்கை மீது ஒன்றிரண்டு முறை ஊர்ந்து சென்றது. அப்போது அவர்கள் எலியாக இருக்கலாம் என, நினைத்து அலட்சியப்படுத்திவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தனர். அதன் பின் பாம்பு படுக்கை அடியில் புகுந்து கொண்டது. இதை அண்ணனும், தங்கையும் கவனிக்கவில்லை. மறுநாள் காலை எழுந்து, படுக்கையை சரி செய்த போது, தலையணைக்கு அடியில் ஐந்து அடி நீள பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாம்பு வல்லுநர் நாகேந்திராவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர், பாம்பை பிடித்துச் சென்று, ஹெசரகட்டாவின் வனப்பகுதியில் விட்டார். நாகேந்திரா கூறியதாவது: நவம்பரில் குளிர்க்காலம் துவங்கும். எனவே பாம்புகள் கதகதப்பான இடங்களை தேடும். விறகு அடுப்பு, வாகனத்தின் இன்ஜின், ஷூக்கள், படுக்கை, தலையணை என, பல இடங்களில் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உறங்கும் போது, ஜன்னல், கதவுகளை திறந்து வைக்காதீர்கள். வீட்டு முன் கழிவுகளை கொட்டி வைக்காதீர்கள். கதவின் அருகில் செடிகளை வளர்க்காதீர்கள். இதன் மீது ஏறி பாம்பு உள்ளே புகுந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை