உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விடுமுறை தராத அதிகாரி பஸ் ஓட்டுநர் தற்கொலை

விடுமுறை தராத அதிகாரி பஸ் ஓட்டுநர் தற்கொலை

பீதர்: விடுமுறை கேட்டதற்கு, பணிமனை அதிகாரி மிரட்டியதால், பஸ் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஊழியர்கள் வலியுறுத்தினர். பீதர் நகரின் அனதுாரா கிராமத்தில் வசித்தவர் ராஜ்குமார், 59. இவர் கல்யாண கர்நாடகா போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றினார். பணிமனை - 1ல், பீதர் - பல்லாரி இடையிலான வழித்தடத்தில் இயங்கும், 'ஸ்லீப்பர் கோச்' பஸ்சில் ஓட்டுநராக இருந்தார். இன்னும் ஐந்து மாதங்களில், பணியில் இருந்து ஓய்வு பெறவிருந்தார். ராஜ்குமாருக்கு, திருமணமாகி நான்கு மகள்கள் உள்ளனர். மூவருக்கு திருமணம் செய்துள்ளார். இன்னும் ஒரு மகளுக்கு, திருமணம் ஆக வேண்டியுள்ளது. திருமணம் செய்து கொடுத்துள்ள தன் மகளை பார்க்க ராஜ்குமார் விரும்பினார். எனவே நேற்று முன்தினம் மாலையில், பணிமனை அதிகாரி விட்டல் போவியிடம் சென்று, தனக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கும்படி கோரினார். ஆனால் அதிகாரி, 'விடுமுறை கொடுக்க முடியாது. கட்டாயமாக பணிக்கு ஆஜராக வேண்டும். ஒருவேளை விடுமுறை எடுத்தால், உன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்து அனுப்பினார். இதே வருத்தத்தில் வந்த அவர், இரவு பணி முடிந்து நடத்துநர் சென்ற பின், பஸ்சிலேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலை இதை கவனித்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பீதர் போலீசார், உடலை மீட்டனர்; வழக்குப் பதிவு செய்தனர். 'ராஜ்குமாரின் தற்கொலைக்கு பணிமனை அதிகாரியே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வலியுறுத்தினர். 'தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் அளிக்க வேண்டும். அவர்களில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும்' எனவும், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி