முற்றுகை போராட்டம் நடத்துவோம் பஸ் ஊழியர்கள் எச்சரிக்கை
பெங்களூரு: ''கே.எஸ்.ஆர்.டி.சி., தலைமை அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம்,'' என, அக்கழக ஊழியர் சங்க தலைவர் ஜெகதீ ஷ் கூறினார். கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க தலைவர் ஜெகதீஷ் கூறியதாவது: கடந்த 2020ம் ஆண்டில் ஓட்டுநர்கள் மற்றும் இதர பதவிக்காக கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் 2,545 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 545 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் வயது அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களுக்கு பணி கிடைக்காமல் போகும் வாய்ப்பு ஏற்படலாம். கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் தேர்வு செய்யப்பட்டதால் அவர்கள் வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் உள்ளனர். இதனால், அவர்களின் பொருளாதார சூழல் மோசமாகி உள்ளது. இவ்விஷயம் குறித்து முதல்வர் சித்தராமையா, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினோம். இருப்பினும், எந்த பயனும் இல்லை. இந்த கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை என்றால், வரும் நாட்களில் கே.எஸ்.ஆர்.டி.சி., தலைமை அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.