உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஈஜிபுரா மேம்பாலம், மெட்ரோ பணி விரைந்து முடிக்க டிரம்புக்கு அழைப்பு

ஈஜிபுரா மேம்பாலம், மெட்ரோ பணி விரைந்து முடிக்க டிரம்புக்கு அழைப்பு

பெங்களூரு,: பெங்களூரு ஈஜிபுராவில் ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பாலம், மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க, 'மத்தியஸ்தம்' செய்து தரும்படி அமெரிக்க அதிபருக்கு நெட்டிசன்கள் தகவல் அனுப்பி உள்ளனர்.பெங்களூரு ஈஜிபுராவில் பல ஆண்டுகளுக்கு முன் மேம்பால பணிகளும், மஞ்சள் வழித்தடம் மெட்ரோ ரயில் பணிகளும் துவங்கின. ஆனால் இன்னும் பணிகள் முடியாமல், ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், வியாபாரிகள், இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். பணிகள் எப்போது தான் முடியும் என்று எதிர்பார்த்துள்ளனர்.இதற்கிடையில், 'இந்தியா - பாகிஸ்தான் சண்டை உடனடியாக நிறுத்தப்படுகிறது' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகுக்கு சமூக ஊடகத்தில் அறிவித்தார். அமெரிக்காவின் தீவிர முயற்சியால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக கூறிய டிரம்ப், இரு நாடுகளின் பிரதமர்களையும் பாராட்டினார்.இதையறிந்த நெட்டிசன்கள், தங்கள் கை வண்ணத்தை காண்பித்தனர்.சமூக ஊடகத்தில், 'கர்நாடகா வெதர்' கணக்கு வைத்துள்ள நபர், 'பெங்களூரு ஈஜிபுராவில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் மேம்பாலம் கட்டும் பணியும், நம்ம மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் வழித்தட ரயில் பணிகளும் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.'இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்வது பெரிய விஷயம் அல்ல. நீங்கள் உண்மையான தேசிய தலைவர், பேச்சில் கில்லாடி என்றால், பெங்களூரு ஈஜிபுரா மேம்பாலம், மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க மத்தியஸ்தம் செய்து காட்டுங்கள். இது உங்களுக்கு நான் விடும் சவால்' என்று குறிப்பிட்டு, அவரது சமூக ஊடகத்தை, 'டேக்' செய்துள்ளார்.இதை பல நெட்டிசன்களும் வரவேற்றுள்ளனர். சிலர், 'டிரம்பிற்கு போரை நிறுத்துவது சுலபம்; ஆனால் மேம்பாலம் கட்டுமாறு கூறுவது முடியாத காரியம். அவ்வாறு மேம்பாலம் கட்டினால் 'நம்ம டிரம்ப்' மேம்பாலம் என்று பெயர் வைத்து, திறப்பு விழாவுக்கு உங்களை அழைக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ