ஊசியை எடுத்துடவா? கணவரிடம் அனுமதி கேட்ட டாக்டர் கிருத்திகா: கால் ரொம்ப வலிக்குது...
மாரத்தஹள்ளி: 'கால் ரொம்ப வலிக்குது... நீங்கள் குத்திய ஊசியை எடுத்து விடவா?' என கேட்டு, கணவர் மகேந்திர ரெட்டிக்கு டாக்டர் கிருத்திகா கடைசியாக குறுந்தகவல் அனுப்பியது தெரிய வந்துள்ளது. பெங்களூரு, மாரத்தஹள்ளியை சேர்ந்த டாக்டர் கிருத்திகா ரெட்டி, 28 கொலை வழக்கில், அவரது கணவரான டாக்டர் மகேந்திர ரெட்டி, 33, கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மகேந்திர ரெட்டி, மனைவி கிருத்திகாவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்து கொன்றதும்; மாமனாரின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டதும் தெரிய வந்தது. போலீஸ் நடத்திய விசாரணையில், மேலும் சில பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி கிருத்திகா இறந்தார். அன்றைய தினம் மதியம், மகேந்திர ரெட்டிக்கு 'வாட்ஸாப்'பில் மெசேஜ் அனுப்பிய கிருத்திகா, எனக்கு கால் ரொம்ப வலிக்கிறது. 'ப்ளீஸ்' காலில் செலுத்தி உள்ள ஐ.வி., ஊசியை எடுத்து விடவா?' என்று அனுமதி கேட்டுள்ளார். 'இன்று ஒரு நாள் மட்டும் வலியை பொறுத்துக் கொள்; நாளை ஊசியை எடுத்து விடலாம்' என, மகேந்திர ரெட்டி கூறியதால், கிருத்திகா வலியை பொறுத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. கொலை செய்ய திட்டமிட்டு, கிருத்திகாவின் உடலில் 'புரோபோபால்' என்ற மயக்க மருந்தை மகேந்திர ரெட்டி செலுத்தி உள்ளார். இந்த ஊசி போட்ட 24 மணி நேரத்தில், மருந்தை உடலில் செலுத்தியதற்கான எந்த அறிகுறியும் இருக்காது. கிருத்திகா இறந்த அன்று காலை, அவரது உடலில் மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளது. 'உடலை உடனே பிரேத பரிசோதனைக்கு அனுப்பினால், சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில், ஒரு நாள் கழித்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பலாம்' என, மகேந்திர ரெட்டி கூறி உள்ளார். ஆனால் கிருத்திகாவின் தங்கையான டாக்டர் நிகிதா கூறியதால், உடல் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதால், மகேந்திர ரெட்டி சிக்கியது தெரிய வந்துள்ளது.