உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரத்து! பெங்களூரில் ரூ.3,198 கோடி மேம்பால திட்டங்கள்...

ரத்து! பெங்களூரில் ரூ.3,198 கோடி மேம்பால திட்டங்கள்...

பெங்களூரில் உள்ள தலையாய பிரச்னைகளில் முக்கியமான ஒன்று போக்குவரத்து நெரிசல். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. முதலில் 76.50 கி.மீ., துாரத்துக்கு, 11 மேம்பாலங்கள் கட்ட, நகர வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் பி - ஸ்மைல் நிறுவனம் திட்டமிட்டது. இதற்கு, 13 ஆயிரத்து 262 கோடி ரூபாய் ஆகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், ஒன்பது மேம்பாலங்கள் கட்டுவதற்கு மட்டுமே மாநில அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் வழங்கியது. இதனால், 3,198 கோ டி ரூபாய் மதிப்பில், மைசூரு சாலை, துமகூரு சாலை, மஹாலட்சுமி லே - அவுட், கனகபுரா சாலை, ஹட்சன் சதுக்கம், கோனனகுண்டே சாலை, ஓல்ட் மெட்ரால் சாலை, தொட்டபல்லாபூர் சாலை, ஓசூர் சாலை ஆகிய ஒன்பது இடங்களில், 29 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலங்கள் கட்டப்பட இருந்தன.

குளறுபடி

இதற்கான ஆரம்பகட்ட டெண்டர்களை கோரும் பணிகளை, பி - ஸ்மைல் நிறுவனம் செய்தது. ஒப்பந்ததாரர்கள் கடந்த செப்டம்பர் மாதம் பட்டியலிடப்பட்டனர். இறுதி கட்ட பணிகள் நடந்து வந்தன. இதற்கிடையே, டெண்டர் செயல்முறையில் குளறுபடி நடந்துள்ளதாகவும், குறிப்பிட்டவர்களுக்கு சாதகமாக டெண்டர் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதை விசாரிக்க, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வரராவ் தலைமையில் உயர் மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதில், மாநகராட்சி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். இவ்விவகாரம் குறித்து, விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையின் மூலம் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை, கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டத்தை மீறி, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யாமல், அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்துள்ளனர். மேலும், டெண்டர் செயல்முறையின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என தெரிந்தது. இதனால், பெங்களூரில், 3,198 கோடி ரூபாய் மதிப்பில்கட்டப்படவிருந்த ஒன்பது மேம்பாலங்களுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மீண்டும் முதலிலிருந்து டெண்டர் கோரும் பணிகள் துவங்க உள்ளது. மேலும், கட்டுமான பணிகளும் தாமதமாகும். இந்த செய்தி, வாகன ஓட்டிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை