முதல்வர் வீட்டின் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் வீட்டின் அருகே, கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு, குமாரகிருபா சாலையில், முதல்வர் சித்தராமையாவின் அலுவலக இல்லமான 'கிருஷ்ணா' உள்ளது. இந்த இல்லத்தின் சுற்றுச்சுவர் முடியும் இடத்தை ஒட்டி, ஐ.டி.சி., ஹோட்டல் உள்ளது. நேற்று காலையில் ஹோட்டல் முன் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதை கவனித்த டிரைவர், உரிமையாளர் உடனடியாக காரில் இருந்து இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி கார் தீப்பிடித்து எரிவதை மொபைல் போனில் வீடியோ, புகைப்படம் எடுத்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார், வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர், காரில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முழுதும் சேதமடைந்தது. கார் தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. மின் ஒயர்களில் ஏற்பட்ட உரசலால் தீப்பிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஐகிரவுண்ட் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.