உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காம்பவுண்டு இடிந்து 7 பேர் பலியான வழக்கில் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு

 காம்பவுண்டு இடிந்து 7 பேர் பலியான வழக்கில் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு

சிவாஜிநகர்: சிவாஜிநகர் பவுரிங் மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் இடிந்து, ஏழு பேர் பலியான வழக்கில், கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவாகி உள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் 29ம் தேதி பெய்த கனமழையால், சிவாஜிநகர் பஸ் நிலையம் எதிரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனை காம்பவுண்டு இடிந்து விழுந்தது. அந்த சுவரை ஒட்டிய நடைபாதையில் நின்ற சிறுமி உட்பட ஏழு பேர் இறந்தனர். இதுகுறித்து லோக் ஆயுக்தா தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. சம்பவம் குறித்து அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், மருத்துவமனையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஏ.எஸ்.ஆர்.டிரேடர்ஸ் நிறுவனம், கட்டுமான கழிவுகளை சுவரின் அருகே கொட்டி வைத்திருந்ததால், அழுத்தம் தாங்க முடியாமல் சுவர் இடிந்தது பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்வதுடன், பணியில் அலட்சியமாக செயல்பட்ட சுகாதார துறை இன்ஜினியர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜி.பி.ஏ., நிர்வாக இன்ஜினியர் சந்திரா, காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது பற்றி விளக்கம் கேட்டு ஏ.எஸ்.ஆர்.டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மே 18ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். ஆனால், காலகெடு முடிந்த பிறகும், நிறுவனம் சார்பில் எந்த விளக்கம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து ஏ.எஸ்.ஆர்.டிரேடர் ஸ் நிறுவனத்தின் அலட்சியத்தால் ஏழு பேர் இறந்ததாக கூறி, கமர்ஷியல் தெரு போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை