அமைச்சர் குறித்து அவதுாறு கருத்து; மாஜி பெண் கவுன்சிலர் மீது வழக்கு
மங்களூரு : பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கில், அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த பா.ஜ., முன்னாள் பெண் கவுன்சிலர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.மங்களூரு கின்னிபதவில் கடந்த 1 ம் தேதி, பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுகாஸ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர்.இந்நிலையில் மங்களூரு மாநகராட்சி பா.ஜ., முன்னாள் பெண் கவுன்சிலர் ஸ்வேதா பூஜாரி, 40; தனது முகநுால் பக்கத்தில், சுகாஸ் ஷெட்டி கொலை தொடர்பாக, தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர் தினேஷ் குண்டுராவுக்கு எதிராக அவதுாறு கருத்து பதிவு செய்து இருந்தார்.இதுகுறித்து மங்களூரு வடக்கு காங்கிரஸ் மகளிர் பிரிவு துணை தலைவர் சாந்தா ராவ் அளித்த புகாரில், ஸ்வேதா பூஜாரி மீது சூரத்கல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். பின், வழக்கை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றினர்.