ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த இளம்பெண் மீது வழக்கு
பெல்லந்துார்: ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த இளம்பெண் மீது, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பெங்களூரின் தொட்ட சோமனஹள்ளியில் வசிப்பவர் லோகேஷ், 35. ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று மதியம் 3:30 மணியளவில், பெல்லந்துாரின் சென்ட்ரல் மால் அருகில், ஆட்டோவை இடதுபுறம் திருப்பிச் சென்று கொண்டிருந்தார்.அப்போது வலதுபுறமாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ லேசாக உரசியது. கோபமடைந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர், லோகேஷை வழிமறித்து, தகராறு செய்தார்.'எங்கள் பைக் மீது ஏன் மோதினாய்?' என, கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது, பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண், கையாலும், செருப்பாலும் லோகேஷை தாக்கினார்.இதை பார்த்த அப்பகுதியினர், இளம்பெண்ணை கண்டித்தனர். அவர்களுடனும் இளம்பெண் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த காட்சிகள் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.நடுரோட்டில் தன்னை இளம்பெண் தாக்கியதால், மனம் நொந்த லோகேஷ், பெல்லந்துார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து, போலீசார் கூறியதாவது:ஆட்டோ ஓட்டுநர் லோகேஷை தாக்கிய இளம்பெண்ணின் பெயர், முகவரி தெரியவில்லை. அவரும், பைக் நபரும் வட மாநிலத்தவரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இளம்பெண் செருப்பால் அடித்த காட்சி, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.இதில் இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்கள் பதிவாகியுள்ளன. இதை வைத்து, இருவரையும் கண்டுபிடிப்போம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.