ஜாதி வாரி சர்வே அக்., 12 வரை நீட்டிப்பு
பெங்களூரு: ஜாதி வாரி சர்வே காலக்கெடுவை நீட்டித்து, மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்காக பள்ளிகளின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. மாநில அரசு ஜாதி வாரி சர்வே நடத்தி வருகிறது. ஆசிரியர்கள், ஆஷா ஊழியர்கள் வீடு வீடாக சென்று சர்வே நடத்துகின்றனர். செப்டம்பர் 22 முதல், அக்டோபர் 7ம் தேதி வரை, சர்வே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. பல்வேறு இடையூறுகளால், சர்வே முழுமையாகவில்லை. எனவே காலக்கெடுவை 12ம் தேதி வரை நீட்டித்து, அரசு நேற்றிரவு உத்தரவிட்டது. இதற்காக பள்ளி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை, காலை 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். அதன்பின் ஜாதி வாரி சர்வே நடத்த செல்லும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லையில், தாமதமாக சர்வே துவங்கியதால், அக்டோபர் 24 வரை, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.