பெங்களூரு: தனியாரை போன்று, தற்போது காவிரி குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய, பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டம் வகுத்துள்ளது. பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரின் 1.40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, காவிரி குடிநீர் வாரியம் குடிநீர் வழங்குகிறது. வீடு வீடாக குழாய்கள் மூலமாகவும், பல இடங்களில் டேங்கர்களிலும் குடிநீர் வழங்குகிறது. தற்போது தனியார் நிறுவனங்களை போன்று, காவிரி குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய திட்டம் வகுத்துள்ளது. சர்வதேச அளவிலான நிறுவனங்களுடன் குடிநீர் வாரியம் போட்டி போட வேண்டும். எனவே தனியார் ஒருங்கிணைப்பில், காவிரி குடிநீர் பாட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். நீரையும், இதை பாட்டில்களில் நிரப்பும் மையம் அமைப்பதற்கான இடத்தையும், குடிநீர் வாரியம் வழங்கும். இந்த மையத்தை நிர்வகித்து, குடிநீரை விற்கும் பொறுப்பு ஒப்பந்ததாரருடையது. காவிரி குடிநீர் பாட்டில் விற்பதில் கிடைக்கும் லாபத்தில், குடிநீர் வாரியமும், ஒப்பந்ததாரரும் சமமாக எடுத்துக் கொள்ள ஆலோசிக்கப்படுகிறது. காவிரி பிராண்ட் பாட்டில் குடிநீருக்கு, என்ன பெயர் வைப்பது என, இன்னும் முடிவு செய்யவில்லை. சர்வதேச அளவில் விற்பனையை விஸ்தரிக்க வேண்டும் என்பதால், அதற்கு ஏற்ற பெயர் சூட்டப்படும். அதிகாரிகள் அளவில் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சருமான, துணை முதல்வர் சிவகுமாரின் ஒப்புதல் பெற்று, அரசுக்கு கோரிக்கை அனுப்பப்படும். நாட்டில் தற்போது, பிளாஸ்டிக் பாட்டில், கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்கப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள், புற்றுநோய்க்கு காரணமாகும். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், பெங்களூரு குடிநீர் வாரியம், நாட்டிலேயே முதன் முறையாக பயோ டிகிரேட் பாட்டில்களை அறிமுகம் செய்யவுள்ளது. மற்ற பாட்டில்களை விட, இந்த பாட்டில்களின் விலை அதிகம். மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சுற்றுச் சூழலை பாதுகாப்பவும், இந்த பாட்டில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.