சாமுண்டீஸ்வரி தரிசனம்: யதீந்திரா ஏமாற்றம்
மைசூரு; ஆஷாடா மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று, மைசூரின் சாமுண்டி மலையில் உள்ள, சாமுண்டீஸ்வரியை தரிசித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். பக்தர்களுக்கு தொந்தரவு ஏற்பக்கூடாது என்பதால் வி.ஐ.பி.,க்கள், சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்ய, காலை 10:00 மணி வரை மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நகர மேம்பாட்டு துறை அமைச்சர் யதீந்திரா, நேற்று சாமுண்டீஸ்வரியை தரிசிக்க வந்திருந்தார். ஆனால் அவர் மலையை அடைவதற்குள், வி.ஐ.பி., தரிசன நேரம் முடிந்துவிட்டது. அதிகாரிகள் அவரை தரிசனம் செய்யும்படி கூறினார். அமைச்சராக இருந்தாலும், தனக்காக விதிகளை தளர்த்த விரும்பாத அவர், கோவிலுக்குள் செல்லாமல் திரும்பி விட்டார். இது குறித்து, அமைச்சர் யதீந்திரா அளித்த பேட்டி: நாமே விதிகளை வகுத்து, நாமே அவற்றை மீறுவது சரியல்ல. நான் தாமதமாக கோவிலுக்கு வந்ததால், சாமுண்டீஸ்வரியை தரிசிக்க முடியவில்லை. முக்கியஸ்தர்கள் என்பதால், நேரடியாக தரிசனத்துக்கு சென்றால், மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு, தொந்தரவு ஏற்படும். அவர்களின் நலனுக்காக, நான் சாமுண்டீஸ்வரியை தரிசிக்காமல் திரும்புகிறேன். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், தரிசனம் செய்வது நமது கடமை . இவ்வாறு கூறினார்.