| ADDED : டிச 04, 2025 05:47 AM
பெங்களூரு: பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் கடுமையான வயிற்று போக்கால் மக்கள் பாதித்து வருகின்றனர். கோடையில் அதிகமா க காணப்படும் இந்த வயிற்றுபோக்கு, இப்போது குளிர்காலத்திலும் துவங்கி உள்ளதால், மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து, மருத்துவர்கள் கூறியதாவது: உங்களுக்கு வயிற்று வலி, காய்ச்சல், டைபாய்டு, வைரஸ் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் கடுமையான வயிற்றுப் போக்கால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தலைநகர் பெங்களூரில் வானிலை மாற்றம் காரணமாக, தெருவோர கடைகளில் விற்கப்படும் உணவுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடந்த ஒரு வாரத்தில், மாநிலத்தில், 3,221 வயிற்று போக்கு வழக்குகள் பதிவாகி உள்ளன. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க, சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. நடப்பாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 1.66 லட்சம் பேர் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடல் அழற்சி நோயாளிகள், சுத்தமான குடிநீர் அதிகளவில் குடிக்க வேண்டும். இல்லையெனில் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.