உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரசாயன தொழிற்சாலை டேங்கர் வெடித்து 2 தொழிலாளர்கள் பலி

 ரசாயன தொழிற்சாலை டேங்கர் வெடித்து 2 தொழிலாளர்கள் பலி

மாண்டியா: மாண்டியாவில் நேற்று காலை ரசாயன தொழிற்சாலையில் பெரிய டேங்கர் வெடித்ததில், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மாண்டியா மாவட்டம், பசரலு பேரூராட்சிக்கு உட்பட்ட கரெகட்டே கிராமத்தில், கீர்த்தி ரசாயன தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை பயங்கர சத்தத்துடன், பெரிய டேங்கர் வெடித்து சிதறியது. இதில், பீஹாரை சேர்ந்த கலு கான், 27, அசோக், 26, ஆகிய இரு தொழிலாளர்கள் உடல் சிதைந்து உயிரிழந்தனர். காசிம், ரவி, மகந்தேஷ், ராஜிவ் குமார் ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அங்கு வந்த கிராமத்தினர், படுகாயம் அடைந்தவர்களை, மாண்டியா மிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பசரலு போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். கிராமத்தினர் கூறியதாவது: கடந்த 2022ல் இத்தொழிற்சாலையில் காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் எங்களின் நுாற்றுக்கணக்கான ஏக்கம் பயிர்கள் பாதிக்கப்பட்டதுடன், இரண்டு நாய்கள் உயிரிழந்தன. கிராமத்தினர் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையை மூடும்படி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்ற, அதன் உரிமையாளர் ஒப்புக் கொண்டார். இங்குள்ள பொருட்கள் வேறு இடத்துக்கு மாற்றும் பணி, கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. இன்று (நேற்று) காலை இந்த தொழிற்சாலையில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இங்கு வந்த போது, இருவர் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ