உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட முதல்வர் அழைப்பு

ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட முதல்வர் அழைப்பு

பெங்களூரு: ''மத்திய அரசு, கன்னட மொழியை புறக்கணித்து, ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது. கன்னட எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும்,'' என, மாணவர்களுக்கு, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார். பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நேற்று கன்னட ராஜ்யோத்சவா விழா நடந்தது. விழாவை துவக்கிவைத்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது: நாட்டின் பொருளாதாரத்துக்கு கர்நாடகா குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. ஆனாலும் மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. மத்திய அரசுக்கு, மாநில அரசு ஆண்டுதோறும் 4.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தருகிறது. இதில் ஒரு பகுதியை மட்டுமே, மாநில அரசுக்கு மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. ஹிந்தி திணிப்பு ஹிந்தி மொழியை திணிக்க, தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன. ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு ஆதரவாக, கன்னடம் மற்றும் பிற மாநில மொழிகள் ஓரங்கட்டப்படுகின்றன. ஹிந்தி, சமஸ்கிருதம் மொழி மேம்பாட்டுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி வரும் மத்திய அரசு, மற்ற இந்திய மொழிகளை புறக்கணிக்கிறது. ஹிந்தியை திணிக்க முயற்சிக்கும், கன்னட எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும். இந்தாண்டு கன்னட மொழிக்கு புக்கர் பரிசை கொண்டு வந்ததன் மூலம், பானு முஷ்டாக், தீபா பாஸ்தி ஆகியோர் நம் மொழியின் சக்தியை உலக அரங்கிற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். தாய் மொழி கற்றல் குறைந்து வருவது, மாநிலத்தின் இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிப்பதாகும். வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள், தங்கள் மொழியில் சிந்திக்கின்றனர்; கற்றுக்கொள்கின்றனர்; கனவு காண்கின்றனர். ஆனால் இங்கே, ஆங்கிலமும், ஹிந்தியும் நம் குழந்தைகளின் திறமையை பலவீனப்படுத்துகின்றன. தாய் மொழியை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த சட்டங்களை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இந்த திசையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தின் சகாப்தம், தற்போது செயற்கை தொழில்நுட்பத்தின் சகாப்தமாக மாறி வருகிறது. இதனால் வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது. கன்னடத்தை புதிய தொழில்நுட்பத்தின் மொழியாக மாற்ற, அறிஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் முன்வர வேண்டும். கே.பி.எஸ்., கே.பி.எஸ்., எனும் கர்நாடக பப்ளிக் பள்ளியாக 800 கன்னட பள்ளிகளும், 100 உருது பள்ளிகளும் மேம்படுத்தப்படுகின்றன. மதரசாக்களில் கன்னட மொழியை கற்பிக்க, முன்னுரிமை அளித்து வருகிறோம். கன்னட மொழி, மரபுகளை உலகளவில் உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக புதிய கொள்கை கொண்டு வரப்படும். மாநிலத்தில் 100 ஆண்டுகளை கடந்த, 3,000 அரசு பள்ளிகள் உள்ளன. மாநிலத்தில் பள்ளி கல்வி துறையை பலப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் 2,500 கோடி ரூபாய் செலவில், 800 அரசு பள்ளிகள், 'கே.பி.எஸ்.,' பள்ளியாக மாற்றப்படும். ஒவ்வொரு பள்ளியும் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். கன்னட கொடி அடுத்தத்த அமைச்சரவை கூட்டத்தில், ராஜ்யோத்சவாவை ஒட்டி, நவம்பர் முழுதும் மாநிலத்தின் தனியார், அரசு அலுவலகங்களில் கன்னட கொடி ஏற்றுவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். கர்நாடகா வெறும் நாடல்ல; அது ஒரு கலாசார இடம். அது கற்றவர்களுக்கு அமிர்தம், நடப்பவர்களுக்கு நிழல், ஒளியின் கலங்கரை விளக்கம். - சிவகுமார், துணை முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை