மேலும் செய்திகள்
காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவிக்கு குஸ்தி
11-May-2026
பெங்களூரு: தங்கள் சமூக எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, முதல்வர் சிவகுமாருக்கு, மடாதிபதிகள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அமைச்சர் பதவி கேட்டு எம்.எல்.ஏ.,க்களும், சிவகுமார் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கர்நாடகாவின் புதிய முதல்வராக சிவகுமார், கடந்த 3ம் தேதி பதவியேற்று கொண்டார். பரமேஸ்வர் துணை முதல்வராகவும், 12 பேர் அமைச்சராகவும் பதவியேற்றனர். இன்னும் 20 அமைச்சர்கள் பதவி காலியாக உள்ளது. அமைச்சர் பதவியை கைப்பற்ற, எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. சிவகுமார் அமைச்சரவையில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஈஸ்வர் கன்ட்ரே, எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி கிடைத்த போதிலும், கூடுதலாக, 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. உருளு சேவை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் சிவகுமாரை, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தலைமையில் வீரசைவ லிங்காயத் சமூக மடாதிபதிகள் நேற்று சந்தித்தனர். சிவகுமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் சாக்கில், தங்கள் சமூகத்திற்கு கூடுதல் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவருக்கு அமைச்சர் பதவி வழங்கவும் கோரிக்கை வைத்தனர். இதுபோல பல சமூகங்களின் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் சமூக மடாதிபதிகள் வாயிலாக, அமைச்சர் பதவி கேட்டு சிவகுமாருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சில எம்.எல்.ஏ.,க்கள் நேராக சிவகுமார் வீட்டிற்கே சென்று, அமைச்சர் பதவிக்காக துண்டு போட்டு சென்றுள்ளனர். எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்களுக்கு, அமைச்சர் பதவி கேட்டு போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர். கதக்கின் ரோன் தொகுதி எம்.எல்.ஏ., - ஜி.எஸ்.பாட்டீலின் ஆதரவாளர்கள், தங்கள் தலைவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று, நடுரோட்டில் நேற்று உருளு சேவை நடத்தினர். அமைச்சர் பதவி எதிர்பார்க்கும் அதானி தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி கூறுகையில், ''நான், பா.ஜ.,வில் இருந்த போது துணை முதல்வராக பணியாற்றி உள்ளேன். காங்கிரசில் இணைந்து, அதானி தொகுதியில் போட்டியிட்டு 76,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். ''சித்தராமையா, சிவகுமார் எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதி அளித்தனர். அதை காப்பாற்றுவர் என நம்பிக்கை உள்ளது. இன்னும் 20 இடங்களை நிரப்ப வேண்டும் என்பதால், எனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளேன்,'' என்றார்.
11-May-2026