தேசிய விளையாட்டில் பதக்கம் பெறுவோருக்கு ரொக்க பரிசு முதல்வர் சித்தராமையா உறுதி
பெங்களூரு: ''தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் பெறும் வீரர்களுக்கு ஏழு லட்சம் ரூபாய்; வெள்ளிப்பதக்கம் பெறுவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய்; வெண்கலம் பதக்கம் பெறுவோருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்க அரசு தீர்மானித்துள்ளது,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன், கர்நாடகா விளையாட்டு ஆணையம், இளைஞர் மேம்பாட்டு, விளையாட்டு துறை ஆகியவை இணைந்து நடந்தும், 'நான்காவது மினி கர்நாடகா விளையாட்டு போட்டி'யை, பெங்களூரு கன்டீரவா உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். முக்கியத்துவம் அவர் பேசியதாவது: எங்கள் அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எதிர்காலத்திலும் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம். நாட்டிலேயே நம் மாநி லத்தில் தான் மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இது, எதிர்கால விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்கான சரியான தளமாகும். இதில் பங்கேற்பது எவ்வளவு முக்கியம் என்பதை வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்பது உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆண்டுதோறும் இத்தகைய போட்டிகள் நடத்தப்படும். ஒலிம்பிக்கில் உள்ளது போன்று, அனைத்து விளையாட்டு போட்டிகளும் இதில் இருப்பதை விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தேசிய, ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுகள், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இதில் வெற்றி பெறுவோருக்கு, போலீஸ் துறையில் நேரடி பணி வழங்கப்படும். இதற்காக மூன்று சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ரொக்க பரிசு தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும், மாநிலத்தை சேர்ந்த வீரர்களுக்கு, அரசு துறையில், இரண்டு சதவீதம் வேலை வாய்ப்பு வழங்குவோம். அதுபோன்று, தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் பெறும் வீரர்களுக்கு ஏழு லட்சம் ரூபாய்; வெள்ளி பெறுவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய்; வெண்கலம் பெறுவோருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கர்நாடக ஒலிம்பிக் சங்க தலைவர் கோவிந்தராஜ் பேசியதாவது: விளையாட்டுகளில் பங்கேற்பது மன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஒரு நல்ல குடிமகனாக மாற, ஒருவர் நல்ல விளையாட்டு வீரராக இருக்க வேண்டும். விளையாட்டு துறைக்கு ஆதரவு அளிக்கும் முதல்வருக்கு நன்றி. இருப்பினும், மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சிக்கு, 170க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், தற்காலிக பயிற்சியாளர்களை நியமிப்பதன் மூலம், வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஏற்படும் பிரச்னையை நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இன்று முதல் துவங்கும் இப்போட்டியில் 27 விளையாட்டுகள் நடக்க உள்ளன. இதில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து 14 வயதுக்கு உட்பட்ட 5,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.