எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் ஆலோசனை: துணை முதல்வரை ஒதுக்கியதால் சர்ச்சை
பெங்களூரு: முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவது போன்று, துணை முதல்வர் சிவகுமாரை ஒதுக்கிவிட்டு, எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, சித்தராமையா முதல்வராக, சிவகுமார் துணை முதல்வரான பின், இருவருக்கும் ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. இருவரும் சேர்ந்து ஒரே மேடையில் சம்பிரதாயத்துக்காக தோன்றுகின்றனர். இதை எதிர்க்கட்சியினர் பல முறை விமர்சித்துள்ளனர். முதல்வர் பதவி தொடர்பாக, இவர்களுக்கிடையேயான 'பனிப்போர்' சமீப நாட்களாக உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த மைசூரு மாநாட்டில் முதல்வர் பேச்சை புறக்கணித்து விட்டு, பாதியிலேயே துணை முதல்வர் சிவகுமார் வெளியேறினார். 'மேடையில் இல்லாதவர்கள் பெயரையெல்லாம் சொல்ல மாட்டேன்' என்று அவரது பெயரை முதல்வர் தவிர்த்தது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது இருவருக்கும் இடையேயான மோதல் அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் துவங்கி விட்டதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், துணை முதல்வர் சிவகுமாரை ஓரங்கட்டி, எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் சித்தராமையா, நேற்று ஆலோசனை நடத்தினார். இதுவும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 'தொகுதி மேம்பாட்டுக்கு நிதி வழங்கவில்லை' என, மாநில மேலிடப் பொறுப்பாளரிடம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முறையிட்டனர். இந்த விவகாரம் குறித்து முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் அவர் அறிவுரை வழங்கிச் சென்றார். இதையடுத்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு தலா 50 கோடி ரூபாய் நிதி வழங்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, நேற்று சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். ஆனால் கூட்டத்துக்கு துணை முதல்வருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. துணை முதல்வருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதால், அவரால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என, சில அமைச்சர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அப்படி கூறிய இரண்டு மணி நேரங்களில், துணை முதல்வர் பொது இடத்தில் தென்பட்டார். பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு மெட்ரோ நிறுவனம், குடிநீர் வாரிய அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தி, 'நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்' என, துணை முதல்வர் சிவகுமார் உணர்த்தினார். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துக்கு அழைக்காதது குறித்து, ஊடகத்தினர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பியபோது, ''கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காதது குறித்து, எனக்கே எந்த பிரச்னையும் இல்லை. உங்களுக்கு ஏன் கவலை? மாநில காங்., பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, எம்.எல்.ஏ.,க்களுடன் கூட்டம் நடத்தினார். ''இவர்களுடன் ஆலோசனை நடத்தும்படி, முதல்வரிடம் கூறியிருக்கலாம். எனவே அவர் ஆலோசனை கூட்டம் நடத்தியிருப்பார். எம்.எல்.ஏ.,க்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறார்,'' என்றார். எம்.எல்.ஏ.,க்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதையும் துணை முதல்வர் பகிரங்கப்படுத்தினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா கூறுவதுபோல, செப்டம்பரில் அரசியல் புரட்சி நடக்கும் என்பதால், இருவரும் எதிரும் புதிருமாக செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம், கட்சிக்குள் எழுந்துள்ளது.